கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 12:18-30

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 12:18-30 TAERV

சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார். எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன. கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது. பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம். சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார். நம்முடைய சரீரம் பிரிக்கப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்தார். வெவ்வேறு உறுப்புகளும் பிறவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று தேவன் இதைச் செய்தார். சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும். நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது.