கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 12:1-8

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 12:1-8 TAERV

சகோதர சகோதரிகளே, இப்போது நீங்கள் ஆவியின் வரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். நீங்கள் விசுவாசம் உடையவராக மாறும் முன்னர், நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். பிறர் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் உயிரற்ற விக்கிரகங்களை வணங்குவதற்கும் உங்களை நீங்கள் அனுமதித்தீர்கள். தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் “இயேசு சபிக்கப்படட்டும்” என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் “இயேசுவே கர்த்தர்” என்பதைக் கூற முடியாது. ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை. மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார். ஆவியானவரின் வரங்களில் சில ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும். பிறருக்கு உதவும்படியாய் ஆவியானவர் இதை ஒவ்வொருவருக்கும் அளிப்பார். ஒருவனுக்கு ஞானத்துடன் பேசும் ஆற்றலைப் பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார். அதே பரிசுத்த ஆவியானவர் அறிவோடு பேசும் ஆற்றலை இன்னொருவனுக்குக் கொடுக்கிறார்.