சகரியா 2
2
அளவுநூல் பிடிக்கும் மனிதன்
1அதன்பின் நான் பார்த்தபோது, தன் கையில் அளவுநூலைப் பிடித்திருக்கும் ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான். 2“நீ எங்கே போகிறாய்?” என நான் கேட்டேன்.
அதற்கு அவன், “எருசலேமின் நீளமும், அகலமும் என்ன என்று அறிவதற்காக அதை அளப்பதற்குப் போகிறேன் எனப் பதிலளித்தான்.”
3என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன் என்னைவிட்டுப் போனான். அப்பொழுது அவனைச் சந்திக்க வேறொரு தூதன் வந்தான். 4வந்தவன் அவனிடம், “நீ ஓடிப்போய் அந்த இளைஞனிடம் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் மதில்களற்ற பட்டணமாயிருக்கும். ஏனெனில், அங்கு மக்களும் அவர்களின் ஆடுமாடுகளும் திரளாகப் பலுகி நகரத்திற்கு வெளியேயும் இருப்பார்கள். 5நானே அதைச் சுற்றி அக்கினி சுவராயிருந்து, நானே அதற்குள்ளே அதன் மகிமையாகவும் இருப்பேன்’ என யெகோவா அறிவிக்கிறார்” என்றான்.
6“வானத்தின் நான்கு திசைகளிலும் நான் உங்களைச் சிதறடித்தேன். ஆனால் இப்போது வாருங்கள்! வாருங்கள்! வடநாட்டிலிருந்து ஓடி வாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
7“இப்பொழுது வா! பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, தப்பி வா” 8சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர் என்னைக் மகிமைப்படுத்திய பின், உங்களைச் சூறையாடின பிற மக்களுக்கு எதிராக என்னை அனுப்பியிருக்கிறார். ஏனெனில் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். 9நான் நிச்சயமாய் என் கையை அவர்களுக்கு எதிராக உயர்த்துவேன். அவர்களின் அடிமைகள் அவர்களைச் சூறையாடுவார்கள். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
10“சீயோன் மகளே, சத்தமிட்டு களிகூரு; இதோ, நான் வருகிறேன். உன் மத்தியில் வாழ நான் வருகிறேன்” என யெகோவா அறிவிக்கிறார். 11“அந்நாளிலே அநேக நாடுகள் யெகோவாவிடம் இணைந்துகொள்வார்கள். அவர்களும் என் மக்களாவார்கள். அப்பொழுது நான் உன் நடுவில் வாழ்வேன். சேனைகளின் யெகோவாவே என்னை உன்னிடம் அனுப்பினார் என்பதை அப்பொழுது நீ அறிந்துகொள்வாய். 12யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவை தம் உரிமைப் பங்காக்கி, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். 13மனுக்குலமே, நீங்கள் யாவரும் யெகோவா முன்பாக அமைதியாய் இருங்கள். ஏனெனில் அவர் தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எழுந்திருக்கிறார்.”
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சகரியா 2: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.