ரோமர் 16

16
தனிப்பட்ட வாழ்த்துகள்
1கெங்கிரேயா பட்டணத்திலுள்ள திருச்சபையில் ஊழியம் செய்கின்ற#16:1 பிலி. 1:1; 1 தீமோ. 3:8,12. நமது சகோதரி பெபேயாளைக்குறித்து உங்களுக்கு நற்சான்று கொடுக்கிறேன். 2பரிசுத்தவான்களை ஏற்றுக்கொள்ளுகிற விதமாகவே கர்த்தருக்குள் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடமிருந்து அவளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், அதை அவளுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவள் பலருக்கும், எனக்குங்கூட உதவியாய் இருந்தாள்.
3பிரிஸ்கில்லாளுக்கும் ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் என்னுடைய உடன் வேலையாட்கள். 4அவர்கள் எனக்காக உயிர் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்கள். நான் மட்டுமல்ல, யூதரல்லாத மக்களின் திருச்சபைகள் எல்லாமே அவர்களுக்கு நன்றியுள்ளவைகளாய் இருக்கின்றன.
5அவர்களுடைய வீட்டில் கூடிவருகிற திருச்சபைக்கு எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
என் அன்புக்குரியவனான எப்பனெத்துக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். ஆசியா பகுதியில் முதலாவதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவன் அவனே.
6மரியாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் மிகவும் கடுமையாக உங்களுக்காக உழைத்தாள்.
7எனது உறவினர்களான அன்றோனீக்கைக்கும் யூனியாவுக்கும் எனது வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். இவர்களும் என்னுடன் சிறையில் இருந்தார்கள். அப்போஸ்தலர்களுக்குள்ளே இவர்கள் பெயர்பெற்றவர்கள். இவர்கள் எனக்கு முன்பே கிறிஸ்துவில் இருந்தவர்கள்.
8கர்த்தரில் நான் நேசிக்கிற அம்பிலியாவுக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
9கிறிஸ்துவில் என் உடன் ஊழியனாய் இருக்கிற உர்பானுக்கும், என் அன்புக்குரிய நண்பன் ஸ்தாக்கிக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
10பரீட்சிக்கப்பட்டு கிறிஸ்துவில் உண்மையானவன் என நிரூபிக்கப்பட்டிருக்கிற அப்பெல்லேயுவுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
அரிஸ்தொபூலுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
11எனது உறவினன் ஏரோதியோனுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
கர்த்தரில் இருக்கிற நர்கீசுவின் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
12கர்த்தரில் கடுமையாக உழைக்கிறவர்களான திரிபேனாளுக்கும். திரிபோசாளுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
கர்த்தரில் கடுமையாக உழைத்த எனது அன்பான பெர்சியாளுக்குங்கூட என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
13ரூபசுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அவன் கர்த்தரில் தெரிந்துகொள்ளப்பட்டவன். அவனுடைய தாய்க்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் எனக்கும் தாயாய் இருந்தாள்.
14அசிங்கிரீத்துவுக்கும், பிலெகோனுக்கும், எர்மேயாவுக்கும், பத்திரொபாவுக்கும், எர்மாவுக்கும், அவர்களோடிருக்கிற சகோதரருக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
15பிலொலோகுக்கும், யூலியாளுக்கும், நேரேக்கும், அவனுடைய சகோதரிக்கும், ஒலிம்பாவுக்கும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள்.
16ஒருவரையொருவர் பரிசுத்த முத்தமிட்டு வாழ்த்துங்கள்.
கிறிஸ்துவுக்குள்ளான எல்லாத் திருச்சபைகளும் தங்கள் வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
17பிரியமானவர்களே, நீங்கள் கற்றுக்கொண்டவற்றிற்கு முரண்பாடான விதத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, உங்கள் வழியில் இடறல்களை ஏற்படுத்துகிறவர்களைக்குறித்துக் கவனமாய் இருங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். அவர்களைவிட்டு விலகியிருங்கள். 18ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவுக்குப் பணிசெய்கிறவர்கள் அல்ல. ஆனால் தங்கள் வயிற்றுப் பிழைப்பையே பார்த்துக்கொள்கிறார்கள். தங்களுடைய வசப்படுத்தும் பேச்சுக்களினாலும், நயவஞ்சகத்தாலும் கபடற்ற மக்களின் மனங்களை ஏமாற்றுகிறார்கள். 19உங்கள் கீழ்ப்படிதலைப்பற்றி எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இதனால் நான் உங்களைக்குறித்துப் பெருமகிழ்ச்சியடைகிறேன்; ஆனால் நீங்கள் நன்மை எது என்பதைக்குறித்து ஞானமுள்ளவர்களாய் இருப்பதும், தீமையைப் பொறுத்தவரையில் அதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களைப்போல் இருப்பதுமே என் விருப்பம்.
20சமாதானத்தின் இறைவன் விரைவில் சாத்தானை உங்கள் கால்களின் கீழேபோட்டு நசுக்கிப்போடுவார்.
நமது கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருக்கட்டும்.
21என் உடன் ஊழியனான தீமோத்தேயு உங்களுக்குத் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அதுபோலவே எனது உறவினர்களான லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களுக்கு வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறார்கள்.
22இந்தக் கடிதத்தை எழுதிய தெர்தியுவாகிய நானும் கர்த்தரில் என் வாழ்த்துதல்களை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
23காயுவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவிக்கிறான். அவனுடைய வீட்டிலே நான் தங்கியிருக்கிறேன். இங்குதான் திருச்சபையும் கூடுகிறது.
இந்தப் பட்டணத்தின் அரசாங்க அதிபரான எரஸ்துவும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான். நமது சகோதரனான குவர்த்தும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறான்.
24நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களெல்லாரோடும் இருப்பதாக. ஆமென்.#16:24 சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.
25கடந்த யுகங்களில் இரகசியமாய் வைக்கப்பட்டு, இப்பொழுது வெளிப்பட்டிருக்கிற உண்மையின்படி இருக்கிற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும், உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கிற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். 26அந்த இரகசியமான உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கிறது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படியும்படியாகவே இது நடந்தது. 27ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ரோமர் 16: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

ரோமர் 16 க்கான வீடியோ