சங்கீதம் 144

144
சங்கீதம் 144
தாவீதின் சங்கீதம்.
1என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,
அவர் என் கைகளை யுத்தத்திற்கும்,
என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.
2அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை,
என் அரண், என் மீட்பர்,
அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம்,
நாடுகளை#144:2 நாடுகளை என பல கையெழுத்துப் பிரதிகளிலும், என் மக்கள் என எபிரெய மொழி பிரதிகளிலும் உள்ளது. அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.
3யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும்,
வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்?
4மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்;
அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன.
5யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்;
மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும்.
6மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்;
உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும்.
7உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்;
பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும்
என்னை விடுவித்துத் தப்புவியும்.
8அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன;
அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன.
9இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்;
பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன்.
10ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும்
உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.
11கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்;
பொய்பேசும் வாய்களையும்,
வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய
வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.
12அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில்
நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்;
எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென
செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள்.
13எங்கள் களஞ்சியங்கள்
சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்;
எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும்,
பதினாயிரக்கணக்கிலும் பெருகும்.
14எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்;
எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை,
கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை;
எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை.
15இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 144: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்