நீதிமொழி 7

7
விபசாரியைக் குறித்த எச்சரிக்கை
1என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள்,
என் கட்டளைகளை உனக்குள்ளே பெருஞ்செல்வமாக வைத்துக்கொள்.
2என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்;
என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்.
3அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி,
இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.
4ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும்,
மெய்யறிவை, “நீ என் நெருங்கிய உறவினர்” என்றும் சொல்.
5அவை உன்னை விபசாரியிடமிருந்தும்,
மயக்கும் வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் உன்னைக் காத்துக்கொள்ளும்.
6நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று
திரை வழியேப் பார்த்தேன்.
7அப்பொழுது அறிவில்லாத
இளைஞர்கள் மத்தியில் புத்தியற்ற
ஒரு வாலிபனைக் கண்டேன்.
8அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று,
அவளுடைய வீட்டின் வழியே நடந்துபோனான்.
9அது பொழுதுபட்டு மாலைமங்கி
இருள் சூழ்ந்துகொண்டிருந்த வேளையாயிருந்தது.
10அப்பொழுது ஒரு பெண் வேசியின் உடை உடுத்தியவளாய்,
தந்திரமான எண்ணத்தோடு அவனைச் சந்திக்க வெளியே வந்தாள்.
11அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்;
அவள் கால்கள் ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை.
12அவள் ஒருமுறை வீதியிலும் பின்பு பொது இடங்களிலும் நிற்பாள்,
மூலையோரங்களில் பதுங்கிக் காத்திருப்பாள்.
13அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு,
நாணமில்லாத முகத்துடனே அவனிடம்:
14“நான் என் வீட்டில் சமாதான பலிகளைச் செலுத்தி,
இன்று என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினேன்.
15அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்;
நான் உம்மைத் தேடினேன், இப்பொழுது கண்டுகொண்டேன்.
16நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து
எனது கட்டிலை அழகுபடுத்தியிருக்கிறேன்.
17நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும்,
இலவங்கப் பட்டையாலும் என் படுக்கைக்கு நறுமணமூட்டியிருக்கிறேன்.
18வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்;
நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்!
19எனது கணவன் வீட்டில் இல்லை;
அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான்.
20அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான்,
அவன் பெளர்ணமி நாள்வரை வீட்டிற்கு வரமாட்டான்” என்று சொன்னாள்.
21இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி,
அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள்.
22உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்;
வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும்
வலையில் விழப்போகும் மானைப்போலவும்
23தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்;
அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து
உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான்.
24ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
25உங்கள் இருதயத்தை அவளுடைய வழிகளின் பக்கம் திரும்ப விடவேண்டாம்;
அவளுடைய பாதைகளின் பக்கம் இழுப்புண்டு போகாதீர்கள்.
26அவளால் வீழ்த்தப்பட்டுப் பலியானவர்கள் அநேகர்;
அவளால் கொல்லப்பட்டவர்கள் வலிமையான கூட்டம்.
27அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை;
அது மரணத்தின் மண்டபங்களுக்கு வழிநடத்துகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நீதிமொழி 7: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்