எண்ணாகமம் 36
36
செலொப்பியாத்தின் மகள்களின் உரிமைச்சொத்து
1யோசேப்பின் சந்ததிகளின் வம்சங்களிலிருந்து வந்த, மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் வம்சத்திலிருந்து வந்த குடும்பத் தலைவர்கள் மோசேயிடம் வந்தார்கள். அவர்கள் மோசேயிடமும் இஸ்ரயேல் குடும்பங்களுக்குத் தலைமையாயிருந்த தலைவர்களிடமும் வந்து, அவர்களிடம் பேசினார்கள். 2அவர்கள் சொன்னதாவது, “இந்நாட்டைச் சீட்டுப்போட்டு இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொடுக்கும்படி யெகோவா எங்கள் தலைவனான உமக்குக் கட்டளையிட்டிருந்தார். அப்பொழுது எங்கள் சகோதரனான செலொப்பியாத்தின் உரிமைச்சொத்தை அவனுடைய மகள்களுக்கு கொடுக்கும்படி அவர் உத்தரவிட்டிருக்கிறார். 3இப்பொழுது அவர்கள் இஸ்ரயேலின் வேறு கோத்திரங்களிலிருந்து ஆண்பிள்ளைகளைத் திருமணம் செய்தால், அப்போது அவர்களுடைய உரிமைச்சொத்து, எங்கள் மூதாதையர்களின் உரிமைச்சொத்திலிருந்து எடுக்கப்பட்டு, அவர்கள் திருமணம் செய்திருக்கும் கோத்திரத்தின் உரிமைச்சொத்துடனே சேர்க்கப்படும். இவ்வாறு எங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்ட உரிமைச்சொத்தின் ஒரு பங்கு எடுக்கப்பட்டுவிடுமே! 4இஸ்ரயேலருக்கான யூபிலி வருடம் வரும்போது, இந்தப் பெண்களின் உரிமைச்சொத்து அவர்கள் திருமணம் செய்திருக்கும் கோத்திரத்தாரின் உரிமைச்சொத்துடன் சேர்க்கப்படும். இவ்விதமாய் அவர்களுடைய சொத்து எங்கள் முற்பிதாக்களின் கோத்திர உரிமைச்சொத்திலிருந்து எடுக்கப்பட்டுவிடுமே” என்றார்கள்.
5அப்பொழுது மோசே யெகோவாவின் கட்டளைப்படி இஸ்ரயேலருக்குக் கொடுத்த உத்தரவு என்னவென்றால், “யோசேப்பின் சந்ததிகளான இந்தக் கோத்திரத்தார் சொன்னது சரியே. 6செலொப்பியாத்தின் மகள்கள் காரியத்தில் யெகோவா கட்டளையிடுவது இதுவே. அவர்கள் தங்கள் தகப்பனின் கோத்திர வம்சத்திற்குள் தாங்கள் விரும்பிய எவனையும் திருமணம் செய்யலாம். 7இஸ்ரயேலில் எந்த உரிமைச்சொத்தும் ஒரு கோத்திரத்திலிருந்து இன்னொரு கோத்திரத்திற்கு மாற்றப்படக்கூடாது. ஏனெனில் ஒவ்வொரு இஸ்ரயேலனும், தங்கள் முற்பிதாக்களிடமிருந்து உரிமையாக்கிக்கொண்ட கோத்திர உரிமைச்சொத்து நிலத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். 8இஸ்ரயேல் கோத்திரத்தில் உரிமை பெற்றுக்கொள்கிற ஒவ்வொரு மகளும், தன் தகப்பனின் கோத்திர வம்சத்திலே ஒருவனைத் திருமணம் செய்யவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இஸ்ரயேலனும் தன்தன் தகப்பனின் உரிமைச்சொத்தை உடைமையாக்கிக்கொள்வான். 9உரிமைச்சொத்து ஒரு கோத்திரத்திலிருந்து இன்னொரு கோத்திரத்திற்கு மாற்றப்படக்கூடாது. ஏனெனில், ஒவ்வொரு இஸ்ரயேல் கோத்திரமும் தமக்குச் சொந்தமான உரிமைச்சொத்து நிலத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்” என்றான்.
10யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் மகள்கள் செய்தார்கள். 11செலொப்பியாத்தின் மகள்கள் மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் ஆகியோர் தங்கள் தகப்பனின் சகோதரர்களின் மகன்களைத் திருமணம் செய்தார்கள். 12அவர்கள் யோசேப்பின் மகன் மனாசேயின் சந்ததிகளின் வம்சங்களுக்குள்ளே திருமணம் செய்துகொண்டார்கள். அதனால் அவர்களுடைய உரிமைச்சொத்து, அவர்களுடைய தகப்பனின் வம்சத்திற்குள்ளும், கோத்திரத்திற்குள்ளும் தொடர்ந்து இருந்தது.
13எரிகோவுக்கு எதிரே யோர்தான் நதிக்கு அருகான மோவாப் சமவெளிகளில் யெகோவா மோசே மூலம் இஸ்ரயேலருக்குக் கொடுத்த கட்டளைகளும் விதிமுறைகளும் இவையே.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எண்ணாகமம் 36: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.