மாற்கு 14:3-9

மாற்கு 14:3-9 TCV

பெத்தானியாவிலே, அவர் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கும்போது, ஒரு பெண் அங்கே வந்தாள்; அவள் நளதம் என்னும் விலையுயர்ந்த நறுமணத் தைலமுள்ள, வெள்ளைக்கல் குடுவையைக் கொண்டுவந்தாள். அவள் அதை உடைத்து, அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். “இதை ஒரு வருட சம்பளத்தைவிடக் கூடுதலான பணத்துக்கு விற்றிருக்கலாமே. அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்; விரும்புகிற போதெல்லாம், நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம்பண்ணுவதற்கென, முன்னதாகவே ஆயத்தம் செய்யும்படி, அவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றினாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார்.

மாற்கு 14:3-9 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்