மாற்கு 14:1-26

மாற்கு 14:1-26 TCV

பஸ்கா என்ற பண்டிகையும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு, இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைதுசெய்து, அவரைக் கொலைசெய்வதற்கு தந்திரமான ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், “பண்டிகை காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். பெத்தானியாவிலே, அவர் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கும்போது, ஒரு பெண் அங்கே வந்தாள்; அவள் நளதம் என்னும் விலையுயர்ந்த நறுமணத் தைலமுள்ள, வெள்ளைக்கல் குடுவையைக் கொண்டுவந்தாள். அவள் அதை உடைத்து, அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள். அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். “இதை ஒரு வருட சம்பளத்தைவிடக் கூடுதலான பணத்துக்கு விற்றிருக்கலாமே. அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள். அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்; விரும்புகிற போதெல்லாம், நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம்பண்ணுவதற்கென, முன்னதாகவே ஆயத்தம் செய்யும்படி, அவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றினாள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார். அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, தலைமை ஆசாரியர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிப் போனான். அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் தருவதென வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே யூதாஸ் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது வழக்கமாயிருந்தது. எனவே, இயேசுவினுடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அப்பொழுது இயேசு, தம்முடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடம், “பட்டணத்திற்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவனைப் பின்தொடர்ந்து போங்கள். அவன் போகிற வீட்டினுடைய சொந்தக்காரனிடம், ‘என்னுடைய விருந்தினருக்கான அறை எங்கே இருக்கிறது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்காவைச் சாப்பிடவேண்டும்’ என்று போதகர் கேட்கிறார் என அவனுக்குச் சொல்லுங்கள். அவன் உங்களுக்கு ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அது கம்பளங்கள் போடப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டதாய் இருக்கும். அங்கே நாம் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். சீடர்கள் புறப்பட்டு பட்டணத்துக்குள் போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். அப்படியே, அவர்கள் பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். மாலை வேளையானபோது, இயேசு பன்னிரண்டு சீடர்களோடு அங்கு வந்து சேர்ந்தார். அவர்கள் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான். என்னோடு சாப்பிடுகிறவர்களில், ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். அவர்கள் துக்கமடைந்து, ஒருவர் பின் ஒருவராக அவரிடம், “நிச்சயமாக அது நான் இல்லை அல்லவா?” என்று கேட்டார்கள். “என்னுடனே ஒரே கிண்ணத்தில் தொட்டுச் சாப்பிடுகிற பன்னிரண்டு சீடர்களில் ஒருவனே, என்னைக் காட்டிக்கொடுப்பான்” என இயேசு பதிலளித்தார். மானிடமகனாகிய என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடியே நான் போகிறேன். ஆனால் மானிடமகனாகிய என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ! அவன் பிறக்காமலே இருந்திருந்தால் அது அவனுக்கு “நலமாய் இருந்திருக்கும்” என்றார். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு அப்பத்தை எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது, “இதை எடுத்துச் சாப்பிடுங்கள்; இது என்னுடைய உடல்.” பின்பு இயேசு பாத்திரத்தையும் எடுத்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லோரும், அந்தப் பாத்திரத்திலிருந்து குடித்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தமாயிருக்கிறது, இது அநேகருக்காகச் சிந்தப்படுகிறது. உண்மையாய் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் இறைவனுடைய அரசில் திராட்சைப்பழ இரசத்தைப் புதிதாகக் குடிக்கும் அந்த நாள்வரைக்கும், இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார். அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள்.