லூக்கா 1:5-17

லூக்கா 1:5-17 TCV

ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள். அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள். ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள். ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான். ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான். தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான். அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும். அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்; அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான். அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான். அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.