“இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.” அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “ ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக்காலத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்’ என்றும் சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். “இவர், ‘கொஞ்சக்காலம்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள். இதைக்குறித்து சீடர்கள் தம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்று இயேசு அறிந்துகொண்டார். எனவே அவர் அவர்களிடம், “கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக்காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று நான் சொன்னேன். அதனுடைய அர்த்தம் என்னவென்றுதானே நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும். பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால், வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனேயோ, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள். அவ்விதமாகவே நீங்களும் இப்பொழுது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காண்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். யாரும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள். அந்த நாளிலே நீங்கள் என்னிடத்திலே எதையுமே கேட்கவேண்டியதில்லை. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் பெயரிலே என் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் சந்தோஷமும் முழுநிறைவுபெறும். “இவைகளை எல்லாம் உவமைகள் மூலம் உங்களுடன் பேசினேன். ஆனால் காலம் வருகிறது. அப்பொழுது நான் இப்படியான உவமைகளைக் கொண்டு பேசமாட்டேன். பிதாவைக் குறித்து தெளிவாக உங்களோடு பேசுவேன். அந்த நாளிலே நீங்களே என்னுடைய பெயரில் பிதாவினிடத்தில் கேட்பீர்கள். எனவே உங்களுக்காக நான் பிதாவினிடத்தில் கேட்கவேண்டியதில்லை. நீங்கள் என்னில் அன்பாயிருந்ததினாலும், நான் இறைவனிடமிருந்து வந்தேன் என்று விசுவாசிப்பதினாலும், பிதாவே உங்களில் அன்பாயிருக்கிறார். நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு, இந்த உலகத்திற்கு வந்தேன்; இப்போது உலகத்தை விட்டு பிதாவினிடத்திற்கு திரும்பிப் போகிறேன்” என்றார். அப்பொழுது இயேசுவினுடைய சீடர்கள், “இப்பொழுது நீர் உவமையாகச் சொல்லாமல் தெளிவாய் பேசுகிறீர். நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். அதனால் யாரும் உம்மிடத்தில் கேள்விகள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. எனவே நீர் இறைவனிடமிருந்து வந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள். அதற்கு இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கிறீர்களே? ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அப்பொழுது நீங்கள் சிதறடிக்கப்படுவீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள். நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால் நான் தனிமையாய் இல்லை; ஏனெனில் என் பிதா என்னுடனே இருக்கிறார். “நீங்கள் என்னில் சமாதானம் பெற்றவர்களாய் இருக்கும்படியே, இவைகளை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்திலே உங்களுக்கு துன்பங்கள் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யோவான் 16
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோவான் 16:16-33
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்