எரேமியா 31:27-34

எரேமியா 31:27-34 TCV

“நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார். “நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்நாட்களில் மக்கள், “ ‘தந்தையர் புளித்த திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.” யெகோவா அறிவிக்கிறதாவது, “இஸ்ரயேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது. அது அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை. ஏனெனில், நான் அவர்கள் கணவனாயிருந்தபோதும், அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன். அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன், அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள். இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, தன் சகோதரனுக்கோ, ‘யெகோவாவை அறிந்துகொள்’ என்று போதிக்கமாட்டான். ஏனெனில், அவர்களில் மிகச் சிறியவனிலிருந்து பெரியவன்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”