எரேமியா 16

16
பேரழிவின் நாள்
1பின்பு யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. 2“நீ திருமணம் செய்யவேண்டாம். இந்த இடத்தில் மகன்களையும், மகள்களையும் பெறவும் வேண்டாம்.” 3மேலும் இந்த இடத்தில் பிறக்கும் மகன்கள், மகள்களைக் குறித்தும், அவர்களின் தாய்மாரான பெண்களையும், தகப்பன்மாரான மனிதர்களைக் குறித்தும் யெகோவா கூறுவது இதுவே: 4“அவர்கள் பயங்கரமான வியாதிகளால் சாவார்கள். அவர்களுக்காக புலம்ப யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களை யாரும் அடக்கம்பண்ணமாட்டார்கள். அவர்கள் தரையின்மேல் கிடக்கும் குப்பையைப்போல் இருப்பார்கள். அவர்கள் வாளாலும், பஞ்சத்தினாலும் அழிவார்கள், அவர்களுடைய சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும்.”
5யெகோவா சொல்வது இதுவே: “நீ துக்கவீட்டிற்குள் நுழையாதே. புலம்பவோ, ஆறுதல் வார்த்தை சொல்லவோ போகவேண்டாம். ஏனெனில் அந்த மக்களிடமிருந்து நான் என் ஆசீர்வாதத்தையும், என் அன்பையும், என் அனுதாபத்தையும் எடுத்துவிட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். 6“இந்த நாட்டில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் இருவருமே சாவார்கள். அவர்கள் அடக்கம்பண்ணப்பட மாட்டார்கள். அவர்களுக்காகத் துக்கப்படுவதுமில்லை. அவர்களுக்காக ஒருவனும் தன்னை வெட்டிக்கொள்ளவும் மாட்டான். தன் தலையை மொட்டையடிக்கவுமாட்டான். 7செத்தவர்களுக்காக துக்கங்கொண்டாடுகிறவர்களை ஆறுதல்படுத்த ஒருவரும் உணவு கொடுக்கமாட்டார்கள். ஒரு தகப்பனோ அல்லது தாயோ செத்தாலுங்கூட துக்கங்கொண்டாடுகிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவரும் பானமும் கொடுக்கமாட்டார்கள்.
8“விருந்து வீட்டிற்குள் போகவோ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிடவோ குடிக்கவோ உட்கார வேண்டாம். 9ஏனெனில் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடத்தில் உன் கண்களுக்கு முன்பாக, உன் நாட்களில் சந்தோஷத்தின் சத்தத்திற்கும், மகிழ்ச்சியின் சத்தத்திற்கும் ஒரு முடிவுண்டாக்குவேன். மணமகனின் குரலுக்கும், மணமகளின் குரலுக்கும் முடிவுண்டாக்குவேன்.
10“இந்த மக்களிடம் இவற்றை நீ கூறும்போது, அவர்கள் உன்னிடம், ‘யெகோவா ஏன் இந்த பேராபத்தை எங்களுக்கு நியமித்திருக்கிறார்? நாங்கள் என்ன அக்கிரமம் செய்தோம்? அல்லது எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்திருக்கிறோம்?’ எனக் கேட்பார்கள். 11அப்பொழுது நீ அவர்களிடம், ‘உங்கள் முற்பிதாக்கள் என்னைக் கைவிட்டு, வேறு தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்குப் பணிவிடை செய்து, அவைகளை வணங்கினார்கள். என்னையோ கைவிட்டு, என் சட்டத்தையும் அவர்கள் கைக்கொள்ளவில்லை. 12ஆனால் நீங்களோ, உங்கள் முற்பிதாக்களிலும் அதிக கொடியவர்களாக நடந்தீர்கள். எனக்குக் கீழ்ப்படியாமல் எப்படி ஒவ்வொருவரும் தன்தன் தீய இருதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கிறீர்கள் என்று பாருங்கள். 13ஆகவே நான் உங்களை இந்த நாட்டிலிருந்து நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறிந்திராத வேறொரு நாட்டுக்குள் துரத்திவிடுவேன். அங்கே நீங்கள் இரவு பகலாக வேறு தெய்வங்களுக்குப் பணிவிடை செய்வீர்கள். நான் உங்களுக்கு எவ்வித தயவும் காண்பிப்பதில்லை என்று சொல்லுகிறார் என்று சொல்’ என்றார்.
14“எனினும், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறதாவது, “ ‘இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று இனி ஒருபோதும் மனிதர் ஆணையிடமாட்டார்கள். 15ஆனால், அதற்குப் பதிலாக, ‘இஸ்ரயேலரை வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் நாடுகடத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளிலிருந்தும் வெளியே கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்றே ஆணையிடுவார்கள். ஏனெனில் நான் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்களைத் திரும்பவும் கொண்டுவந்து குடியமர்த்துவேன்.
16“ஆனால் இப்போது அநேக மீனவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் இவர்களைப் பிடிப்பார்கள். அதன்பின் அநேக வேட்டைக்காரரை அனுப்புவேன். அவர்கள் இவர்களை ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை வெடிப்புகளிலும் வேட்டையாடிப் பிடிப்பார்கள். 17ஏனெனில் என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளையும் கவனமாய்ப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. அவை எனக்கு மறைவாயில்லை, அவர்களுடைய பாவங்கள் என் கண்களுக்கு மறைக்கப்படவுமில்லை. 18நான் அவர்களுடைய கொடுமைக்கும், பாவத்திற்கும் இரட்டிப்பாகத் தண்டனை கொடுப்பேன். ஏனெனில் அவர்கள் நாட்டை தங்கள் உயிரற்ற இழிவான உருவச்சிலைகளால் கறைப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் என் உரிமைச்சொத்தை தங்கள் அருவருக்கத்தக்க விக்கிரகங்களினால் நிரப்பியிருக்கிறார்கள்.”
19யெகோவாவே, நீரே என் பெலன், என் கோட்டை,
துன்ப நாளில் என் அடைக்கலம்;
பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து பிறநாட்டினர் உம்மிடம் வருவார்கள்.
அவர்கள் வந்து, “எங்கள் முற்பிதாக்கள் போலியான பாரம்பரியங்களைத் தவிர
வேறொன்றையும் வைத்திருக்கவில்லை.
அவைகளோ பயனற்ற விக்கிரகங்கள்,
அவைகளால் அவர்களுக்கு எந்த நன்மையும் உண்டாகவில்லை.
20மனிதர் தமக்கு சொந்தமாகத் தெய்வங்களைச் செய்வார்களோ?
ஆம்; செய்கிறார்கள். ஆயினும் அவைகள் தெய்வங்கள் இல்லையே!”
21“ஆகையால் நான் அவர்களுக்குக் போதிப்பேன்.
இம்முறையோ என் வல்லமையையும்,
ஆற்றலையும் போதிப்பேன்.
அப்பொழுது என் பெயர் யெகோவா என்று
அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எரேமியா 16: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்