எபிரெயர் 12:18-29

எபிரெயர் 12:18-29 TCV

நீங்கள் இப்பொழுது வந்திருப்பது தொடக்கூடியதும், நெருப்பு பற்றி எரிகிறதும், இருளும், மந்தாரமும், புயலும் சூழ்ந்துள்ள அந்த மலையின் பக்கம் அல்ல. அங்கே எக்காளம் முழங்கியது, ஒரு குரல் வார்த்தைகளைப் பேசியது. கேட்டவர்கள் இன்னொருமுறை அந்தக் குரலைத் தாங்கள் கேட்கக்கூடாது என்று, மன்றாடிக் கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், “அந்த மலையை ஒரு மிருகம் தொட்டாலும், அந்த மிருகம் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்” என்று சொல்லப்பட்டக் கட்டளையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. அந்தக் காட்சி மிகவும் பயங்கரமாக இருந்ததினாலே மோசே, “நான் பயத்தினால் நடுங்குகிறேன்” என்று சொன்னான். ஆனால் நீங்களோ, இப்பொழுது ஜீவனுள்ள இறைவனின் நகரமாயிருக்கிற பரலோக எருசலேமாகிய சீயோன் மலைக்கே வந்திருக்கிறீர்கள். ஆயிரம் ஆயிரமான இறைத்தூதர்கள் மகிழ்ச்சியாய் சபை கூடுதலுக்கும், பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்ற முதற்பேறானவர்களின் திருச்சபைக்கும், எல்லா மனிதருக்கும் நீதிபதியாய் இருக்கிற இறைவனிடத்திற்கும், முழு நிறைவடைந்த நீதிமான்களின் ஆவிகளினிடத்திற்கும், புதிய உடன்படிக்கையின் நடுவரான இயேசுவினிடத்திற்கும், ஆபேலின் இரத்தத்தைவிட மேன்மையான வார்த்தையைப்பேசும் இயேசுவின் தெளிக்கப்பட்ட இரத்தத்தினிடத்திற்குமே நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆகவே உங்களிடம் பேசுகிற இறைவனை மறுக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பூமியிலே அவர்களை எச்சரித்த, மோசேயுடைய வார்த்தைகளைக் கேட்க மறுத்தவர்கள் தப்பிப் போகவில்லை. அப்படியானால், பரலோகத்திலிருந்து எச்சரிக்கிறவருக்கு செவிகொடுக்க மறுத்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? அக்காலத்தில் இறைவனுடைய குரல் பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “நான் இன்னும் ஒருமுறை பூமியை மட்டுமல்ல, வானத்தையும் சேர்த்து அசைப்பேன்” என்று இறைவன் வாக்களித்துள்ளார். “இன்னொருமுறை” என்ற வார்த்தை, அசைக்கப்படக் கூடிய படைப்புகள் அகற்றப்படும் என்பதையே தெளிவுபடுத்துகிறது. இதனால், அசைக்கப்பட முடியாதவை தொடர்ந்து நிலைத்திருக்கும். ஆகவே, அசைக்கப்படாத ஒரு அரசையே பெறுகிறவர்களாகிய நாம் நன்றியுடையவர்களாய், இறைவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில், பயபக்தியுடன், ஆராதிப்போம். ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார்.