எபிரெயர் 11:1-8

எபிரெயர் 11:1-8 TCV

விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக்குறித்து நன்றாகப் பேசியபோது, விசுவாசத்தினாலேயே அவன், நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் இறந்து போனபோதும், இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான். விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அவன் காணாமல் போய்விட்டான். அவன் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு, அவன் இறைவனுக்குப் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றிருந்தான். விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்தமுடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகிறவர்கள், அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மை முழுமனதோடு தேடுகிறவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும். விசுவாசத்தினாலேயே நோவா, இன்னும் காணப்படாத காரியங்களைக்குறித்து எச்சரிக்கப்பட்டபோது, தனது குடும்பத்தை இரட்சிக்கும்படி, இறைபயத்துடனே ஒரு பேழையைச் செய்தான். அவன் தன்னுடைய விசுவாசத்தினாலேயே உலகத்தை நியாயந்தீர்த்து, விசுவாசத்தினால் வரும் நீதிக்கு உரிமையாளன் ஆனான். விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச்சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகிறேன் என்றுகூட அவன் அறியாதிருந்ததும் கீழ்ப்படிந்து புறப்பட்டான்.