கலாத்தியர் 5:13-25

கலாத்தியர் 5:13-25 TCV

எனக்கு பிரியமானவர்களே, சுதந்திரமாய் இருப்பதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் சுதந்திரத்தை மாம்சத்தின் ஆசைகளை அனுபவிப்பதற்குச் சாதகமாகப் பயன்படுத்தாதீர்கள். அன்பினாலே ஒருவருக்கு ஒருவர் பணிசெய்யுங்கள். “நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாய் இரு” என்கிற, ஒரே கட்டளையிலே மோசேயின் சட்டம் முழுவதுமே அடங்கியிருக்கிறது. ஆனால் நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குகிறவர்களாய் இருந்தால், கவனமாயிருங்கள். ஏனென்றால், நீங்கள் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி வாழுங்கள். அப்பொழுது உங்கள் மாம்சத்தின்படி எழும் ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதில் ஈடுபடமாட்டீர்கள். ஏனெனில் மாம்ச இயல்பு, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு முரண்பாடான ஆசைகளைத் தூண்டுகிறது. பரிசுத்த ஆவியானவரோ, மாம்ச இயல்புக்கு முரண்பட்ட விதத்திலேயே வழிநடத்துகிறார். அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருக்கின்றன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை உங்களால் செய்ய முடியாதிருக்கிறது. ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டால், நீங்கள் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாம்ச இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை, அவையாவன: முறைகேடான பாலுறவு, அசுத்த பழக்கங்கள், காமவேட்கை; விக்கிரக வழிபாடு, மாந்திரீகம்; பகைமை, தகராறு, எரிச்சல் குணம், கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள், பொறாமை; குடிவெறி, களியாட்டம் போன்றவைகளே. நான் உங்களை முன்பு எச்சரித்ததுபோலவே இப்பொழுதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள், இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை. ஆனால் ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், உண்மைத்தனம், சாந்தகுணம், சுயக்கட்டுப்பாடு என்பனவாகும். இவைகளுக்கு முரணான எந்தவித சட்டமும் இல்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள், தங்கள் மாம்சத்தின் இயல்பை, அதன் தீவிர உணர்ச்சிகளுடனும் ஆசைகளுடனும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறபடியால், ஆவியானவருடனேயே ஒவ்வொரு காலடியையும் எடுத்துவைப்போம்.