எஸ்றா 5
5
ஆளுநர் தத்னாயின் கடிதம்
1அதன்பின் இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகனான இறைவாக்கினன் சகரியாவும், யூதாவிலும் எருசலேமிலும் உள்ள யூதர்களுக்கு தங்களுக்கு மேலாய் இருந்த இஸ்ரயேலரின் இறைவனின் பெயரால் இறைவாக்கு உரைத்தனர். 2அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.
3அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர். 4அத்துடன், “இதைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்கள் என்ன?” எனவும் கேட்டனர். 5ஆனால் இறைவனின் கண் யூதரின் முதியவர்கள்மேல் இருந்தது. தரியு அரசனுக்கு இதைக்குறித்து அறிவிக்கப்பட்டு அவனிடமிருந்து எழுத்துமூலம் பதில் வரும்வரை அவர்களுடைய வேலை நிறுத்தப்படவில்லை.
6ஐபிராத்து நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தத்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகளான ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள அதிகாரிகளும் தரியு அரசனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இதுவே: 7அவர்கள் அவனுக்கு அனுப்பிய அறிக்கையின் விபரமாவது:
தரியு அரசனுக்கு
மனமார்ந்த வாழ்த்துகள்.
8நாங்கள் யூதா மாவட்டத்திலுள்ள மேன்மையுள்ள இறைவனின் ஆலயத்துக்குப் போனோம் என்பதை அரசன் தெரிந்திருக்க வேண்டும். அந்த மக்கள் அதைப் பெரிய கற்களினால் கட்டி மரத்தாலான உத்திரங்களையும் சுவர்களின்மேல் வைக்கிறார்கள். அந்த வேலை மிகக் கவனத்துடனும், துரிதமாகவும் செய்யப்பட்டு வருகிறது.
9அதனால் நாங்கள் அங்குள்ள முதியவர்களிடம் விசாரித்து அவர்களிடம், “இந்த ஆலயக் கட்டிடத்தை திரும்பக் கட்டவும், இந்தக் கட்டட அமைப்பைப் புதுப்பிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டோம். 10அத்துடன் நாங்கள் உமக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் முதியவர்களின் பெயர்களைக் கேட்டு எழுதினோம்.
11அவர்கள் எங்களுக்குப் பதிலுரைத்து:
“நாங்கள் வானத்துக்கும், பூமிக்கும் இறைவனாய் இருப்பவரின் ஊழியர்கள். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தையே நாங்கள் திரும்பவும் கட்டிக்கொண்டிருக்கிறோம். அதை இஸ்ரயேலின் ஒரு பெரிய அரசன் கட்டி முடித்திருந்தான். 12எங்களுடைய முற்பிதாக்கள் பரலோகத்தின் இறைவனுக்குக் கோபமூட்டினதால், அவர் இவர்களை பாபிலோன் அரசனான கல்தேயனாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார். எனவே அவன் இந்த ஆலயத்தை அழித்து மக்களை பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.
13“ஆனாலும் பாபிலோன் அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், இறைவனின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ஒரு கட்டளை பிறப்பித்தான். 14அத்துடன் நேபுகாத்நேச்சார் அரசன் எருசலேமிலுள்ள ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்று, பாபிலோனிலுள்ள கோயிலுக்குள் கொண்டுபோய் வைத்திருந்த தங்கத்தினாலும் வெள்ளியினாலுமான பொருட்களை, கோரேஸ் அரசன் பாபிலோனின் கோயிலிலிருந்து எடுத்தான். பின்பு அவற்றை அரசன் தான் ஆளுநனாக நியமித்திருந்த சேஸ்பாத்சார் என்பவனிடம் கொடுத்தான். 15கோரேஸ் அரசன் அவனிடம், ‘இப்பொருட்களை நீ எருசலேமிலுள்ள ஆலயத்தில் கொண்டுபோய் வை. அவ்விடத்திலேயே இறைவனுடைய ஆலயத்தைத் திரும்பவும் கட்டு’ எனச் சொன்னான்.
16“எனவே சேஸ்பாத்சார் வந்து எருசலேமில் இறைவனின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டான். அந்த நாள் முதல் இன்றுவரை அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இன்னும் முடிவடையவில்லை” என்றார்கள்.
17“ஆகையால் இப்பொழுதும் அரசனுக்கு மனவிருப்பமிருந்தால், பாபிலோனிலுள்ள அரச பதிவேட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்க்கட்டும். எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்படி, கோரேஸ் அரசன் உண்மையாக ஒரு கட்டளையை பிறப்பித்தாரோ என்று தேடிப் பார்க்கட்டும். பின்பு அரசன் இந்தக் காரியத்தில் தீர்மானத்தை எங்களுக்கும் அனுப்பட்டும்” என்றார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எஸ்றா 5: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.