எசேக்கியேல் 44

44
லேவிய ஆசாரியர்கள்
1மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு நோக்கியிருந்த வெளிவாசலுக்குக் கொண்டுவந்தான். அது பூட்டப்பட்டிருந்தது. 2யெகோவா என்னிடம், “இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும். இது திறக்கப்படலாகாது. இதின் வழியாக யாரும் உட்செல்லவும் கூடாது. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இதின் வழியாகவே வந்தார். ஆகவே இது பூட்டப்பட்டே இருக்கும். 3இந்த நுழைவு வாசலின் உட்புறத்தில் யெகோவாவுக்குமுன் சாப்பிடுவதற்கு இளவரசன் மட்டுமே உட்காரலாம். அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவாசல் உட்சென்று அதே வழியாக வெளியேறவேண்டும் என்றார்.”
4பின்பு அம்மனிதன் என்னை ஆலயத்துக்கு முன்னாலிருக்கும் வடக்கு வாசல்வழியால் அழைத்து வந்தான். நான் பார்த்தேன் அப்பொழுது யெகோவாவினுடைய மகிமை யெகோவாவினுடைய ஆலயத்தை நிரப்புவதைக் கண்டேன், நான் உடனே முகங்குப்புற விழுந்தேன்.
5யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, கவனமாகப் பார், கவனித்துக் கேள், யெகோவாவினுடைய ஆலயத்தைப் பற்றிய எல்லா ஒழுங்குவிதிகளையும் பற்றி, நான் கூறும் ஒவ்வொன்றையும் கருத்தாய் கவனித்துக்கொள். ஆலயத்தின் புகுமுக வாசலையும் பரிசுத்த இடத்தின் வெளியேறும் எல்லா வாசல்களையும் குறித்துக் கவனம் செலுத்து. 6கலகக்காரராகிய இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேல் குடும்பத்தாரே, வெறுக்கத்தக்க உங்கள் செயல்கள் போதும். 7உங்கள் வெறுக்கத்தக்க எல்லா பழக்கவழக்கங்களுடனும் அயல் நாட்டினரையும் என் பரிசுத்த ஆலயத்திற்குள் கொண்டுவந்தீர்கள். அவர்களோ இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனம் இல்லாதவர்கள். என் ஆலய தூய்மையைக் கெடுத்தீர்கள். ஆகாரத்தையும் கொழுப்பையும் இரத்தத்ததையும் எனக்கு காணிக்கையாகச் செலுத்தியபோதிலும் என் உடன்படிக்கையை மீறினீர்கள். 8என் பரிசுத்த காரியங்களில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக, என் பரிசுத்த ஆலயத்தையே மற்றவர்களின் பொறுப்பில் விட்டீர்கள். 9ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனமற்ற எந்தவொரு அந்நியனும் என் பரிசுத்த இடத்திற்குள் போகக்கூடாது. இஸ்ரயேலருக்குள் வசிக்கும் அந்நியன்கூட என் பரிசுத்த இடத்திற்குள் போகக்கூடாது.
10“ ‘இஸ்ரயேல் வழிதவறியபோது, சில லேவியர் என்னைவிட்டுத் தூரமாய்ப் போய் விக்கிரகங்களுக்குப் பின்னால் திரிந்தார்கள். அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளைச் சுமக்கவேண்டும். 11அவர்கள் ஆலய வாசல்களுக்குப் பொறுப்பாக இருந்து, அங்கே பணிசெய்யலாம். அவர்கள் மக்களுக்காகத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் வெட்டி மக்கள் முன்நின்று அவர்களுக்கும் ஊழியம் செய்யலாம். அவர்கள் இவ்வாறு மட்டுமே என் பரிசுத்த இடத்தில் பணிபுரியலாம். 12ஆனால் அவர்கள் தங்கள் விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று அவைகளை வணங்கி, இஸ்ரயேலரைப் பாவத்தில் விழச்செய்தபடியால், அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளைச் சுமந்தேயாக வேண்டும். இதை நான் என் உயர்த்திய கையினால் ஆணையிட்டிருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 13அவர்கள் என்னருகே வந்து, ஆசாரியர்களாய்ப் பணிபுரியவோ அல்லது பரிசுத்த காரியங்களுக்கும் மகா பரிசுத்த காணிக்கைகளுக்கும் அருகில் வரவோகூடாது. தங்களுடைய வெறுக்கத்தக்க செயல்களுக்கான வெட்கத்தை அவர்கள் சுமக்கவேண்டும். 14எனினும் அவர்கள் ஆலயத்தைப் பராமரிக்கும் வேலைகளுக்குப் பொறுப்பாயிருக்கவும், அதில் சம்பந்தப்பட்ட வேலைகளையெல்லாம் செய்யவும் நான் அவர்களை நியமிப்பேன்.
15“ ‘ஆனால், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிச் சென்றபோது, என் பரிசுத்த ஆலயத்தின் கடமைகளை சாதோக்கின் சந்ததிகளான லேவியர்கள் உண்மையாய்ச் செய்துவந்தார்கள். அவர்களே எனக்கு ஆசாரியர்களாயிருந்து, எனக்கு முன்பாகப் பணிசெய்ய என்னருகே வரவேண்டும். கொழுப்பும் இரத்தமுமான பலிகளைச் செலுத்துவதற்கு அவர்களே எனக்கு முன்பாக நிற்கவேண்டும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். 16அவர்கள் மாத்திரமே என் பரிசுத்த இடத்திற்குள் வரவேண்டும். என்முன் பணிசெய்யவும், எனது பணியை நிறைவேற்றவும் அவர்கள் மட்டுமே என் மேஜையருகில் வரவேண்டும்.
17“ ‘உள்முற்ற வாசலுக்குள் அவர்கள் வரும்போது அவர்கள் மென்பட்டு நூல் உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உள்முற்றநுழைவு வாசலிலோ அல்லது ஆலயத்துக்கு உட்புறத்திலோ ஊழியம் செய்யும்போது அவர்கள் கம்பளி உடைகளை உடுத்தக்கூடாது. 18அவர்கள் தங்கள் தலைகளில் மென்பட்டு தலைப்பாகைகளையும், இடைகளில் மென்பட்டு உள்ளுடைகளையும் உடுத்திக்கொள்ளவேண்டும். வேர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக்கூடாது. 19அவர்கள் மக்கள் இருக்கும் வெளிமுற்றத்திற்குப் போகும்போது, அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுகையில் உடுத்தியிருந்த உடைகளைக் கழற்றி அவற்றைப் பரிசுத்த அறைகளில் வைத்துவிட்டு, வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உடைகளைத் தொடுவதன் மூலமாக மக்கள் தாங்கள் பரிசுத்தமடைய முயற்சிக்கக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்யவேண்டும்.
20“ ‘அவர்கள் முழுதாக தலைகளைச் சவரம் செய்யவோ, தலைமயிரை நீளமாய் வளர்க்கவோ கூடாது. அவர்கள் தங்களுடைய தலைமயிரைக் கத்தரித்துக்கொள்ளவேண்டும். 21ஆசாரியர்களில் யாரும் உள்முற்றத்தினுள் செல்லும்போது திராட்சை இரசம் அருந்தக்கூடாது. 22விதவைகளையோ அல்லது விவாகரத்துப் பெற்ற பெண்களையோ அவர்கள் திருமணம் செய்யக்கூடாது. இஸ்ரயேல் வம்சத்துக் கன்னிகைகளை அல்லது ஆசாரியர்களின் விதவைகளை மட்டுமே அவர்கள் திருமணம் செய்யலாம். 23அவர்கள் பரிசுத்தமானவற்றுக்கும் சாதாரணமானவற்றுக்கும் இடையிலான வித்தியாசத்தை என் மக்களுக்குக் போதிக்கவேண்டும். அசுத்தமானதையும் சுத்தமானதையும் வித்தியாசப்படுத்துவது எப்படி என்பதையும் காண்பிக்கவேண்டும்.
24“ ‘எந்தப் பிரச்சனைகளிலும் ஆசாரியர்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்கவேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும், நியமிக்கப்பட்டுள்ள எனது எல்லா பண்டிகைகளில் என் கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். எனது ஓய்வுநாட்களையும் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கவேண்டும்.
25“ ‘ஒரு ஆசாரியன், இறந்துபோன ஒருவனுக்கு அருகில் செல்வதால் தன்னை அசுத்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆனாலும் இறந்தது அவனுடைய தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது விவாகமாகாத சகோதரியாக இருப்பின், அவன் அவ்வாறான அசுத்தத்துக்குள்ளாகலாம். 26அவன் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும். 27அதன்பின் பரிசுத்த ஆலயத்தில் ஆராதனை செய்வதற்காக அவன் உள்முற்றத்தினுள் போகும் நாளிலே, அவன் தனக்காக ஒரு பாவநிவாரண பலியைச் செலுத்தவேண்டும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
28“ ‘ஆசாரியர்களின் உரிமைச்சொத்தாய் நான் மட்டுமே இருக்கவேண்டும். எனவே இஸ்ரயேலில் நீங்கள் அவர்களுக்குச் சொத்துக்களைக் கொடுக்கவேண்டாம். நானே அவர்கள் சொத்தாயிருப்பேன். 29அவர்கள் தானிய காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும், குற்றநிவாரண காணிக்கைகளையும் சாப்பிடுவார்கள். அத்துடன் இஸ்ரயேலில் யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவை எல்லாம் அவர்களுக்குரியதாகும். 30முதற்பலன்களில் சிறந்தவைகளும் உங்களுடைய விசேஷ கொடைகளும் ஆசாரியருக்கு உரியதாகும். அரைத்தமாவின் உணவின் முதற்பங்கை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அது உங்கள் வீட்டாருக்கு ஒரு ஆசீர்வாதமாய் அமையும். 31ஆசாரியர்கள் செத்துக்கிடந்த பறவையையோ மிருகத்தையோ சாப்பிடப்கூடாது; அல்லது மிருகங்களால் கொல்லப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எசேக்கியேல் 44: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்