அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது:
“நான் யெகோவாவைப் பாடுவேன்,
அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
குதிரையையும், அதை ஓட்டியவனையும்
அவர் கடலுக்குள் வீசியெறிந்தார்.
“யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார்,
அவரே என் இரட்சிப்புமானார்.
அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன்.
அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.
யெகோவா யுத்தத்தில் வீரர்;
யெகோவா என்பதே அவரது பெயர்.
அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும்
கடலுக்குள் தள்ளிவிட்டார்.
பார்வோனின் அதிகாரிகளில் சிறந்தவர்கள்
செங்கடலில் அழிந்தார்கள்.
ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது;
ஒரு கல்லைப்போல் ஆழத்திலே அவர்கள் அமிழ்ந்தார்கள்.
யெகோவாவே, உமது வலதுகரம்
வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது.
யெகோவாவே, உமது வலதுகரமே
எதிரியை நொறுக்கியது.
“உமது மாட்சிமையின் மகத்துவத்தினால்
உம்மை எதிர்த்தவர்களை கீழே விழத்தள்ளினீர்.
உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்;
அது அவர்களை வைக்கோலைப்போல் எரித்தது.
உமது நாசியின் சுவாசத்தினால்
தண்ணீர் குவிந்தது.
பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப்போல உறுதியாய் நின்றன;
ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்துபோயிற்று.
பகைவன் பெருமையாக,
‘நான் பின்தொடர்வேன், அவர்களைப் பிடிப்பேன்.
நான் கொள்ளையைப் பங்கிடுவேன்;
அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்.
என் வாளை உருவுவேன்,
என் கை அவர்களை அழிக்கும்’ என பேசினான்.
ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர்,
கடல் அவர்களை மூடியது.
அவர்கள் ஈயத்தைப் போல்
பெரும் தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள்.
யெகோவாவே, தெய்வங்களுக்குள்
உம்மைப்போல் யார் உண்டு?
பரிசுத்தத்தில் மாட்சிமையும்,
மகிமையில் வியக்கத்தக்கவரும்,
அதிசயங்களையும் செய்கிற
உம்மைப்போல் யார் உண்டு?
“உமது வலது கரத்தை நீட்டினீர்,
பூமி அவர்களை விழுங்கிற்று.
நீர் மீட்டுக்கொண்ட மக்களை
உமது நேர்மையான அன்பினால் வழிநடத்துவீர்.
நீர் வசிக்கும் பரிசுத்த இடத்திற்கு,
உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டுவீர்.
மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்;
பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.
ஏதோமின் தலைவர்கள் திகிலடைவார்கள்,
மோவாபின் தலைவர்களை நடுக்கம் பிடிக்கும்,
கானானின் மக்களும் கரைந்து போவார்கள்;
பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும்.
யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரை,
நீர் கொண்டுவந்த மக்கள் கடந்துபோகும்வரை,
உமது கரத்தின் வல்லமையால்
அவர்கள் கல்லைப்போல் அசைவில்லாமல் கிடப்பார்கள்.
யெகோவாவே, உமது உரிமைச்சொத்தான மலையில்
நீர் அவர்களைக் கொண்டுவந்து நிலைநாட்டுவீர்;
அந்த இடத்தையே நீர் உமது தங்குமிடமாக்கினீர்,
யெகோவாவே, உமது கைகளே அதைப் பரிசுத்த இடமாக ஏற்படுத்தியது.
“யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.”