“நமது முற்பிதாக்கள் பாலைவனத்தில், தங்களுடன் சாட்சியின் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவன் கண்ட மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது. நமது தந்தையர் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின்கீழ் யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தார்கள். அந்த மக்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம் நமது நாட்டில் தாவீதின் காலம்வரைக்கும் இருந்தது. தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான். ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான்.
“எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்:
“ ‘வானம் எனது அரியணை,
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’
என்று கர்த்தர் கேட்கிறார்.
“அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் தந்தையரைப் போலவே இருக்கிறீர்கள்: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கிறீர்கள்! உங்கள் தந்தையர் துன்பப்படுத்தாத இறைவாக்கினர் எப்போதாவது இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்தவர்களைக்கூட, அவர்கள் கொலைசெய்தார்களே. இப்பொழுது நீங்களே அவரைக் காட்டிக்கொடுத்துக் கொலைசெய்தீர்கள். இறைத்தூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை” என்றான்.
அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள். ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான். “இதோ பாருங்கள், நான் பரலோகம் திறந்திருப்பதையும், மானிடமகன் இறைவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான்.
இதைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப்போய்த் தாக்கினார்கள். பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவன்மேல் கல்லெறியத் தொடங்கினார்கள். அப்பொழுது சாட்சிக்காரர்கள் தங்கள் மேலுடைகளைக் கழற்றி, சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்தார்கள்.
அவர்கள் ஸ்தேவானின்மேல் கல்லெறிந்து கொண்டிருக்கையிலே அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினான். பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான்.