இந்தக் காரியங்களை அவர்களுக்கு நினைப்பூட்டி, வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாமென்று இறைவனுக்கு முன்பாக, அவர்களை எச்சரிக்கை செய். அப்படிப்பட்ட வாக்குவாதமோ கேட்கிறவர்களைப் பாழாக்குமேயன்றி, அதனால் வேறு ஒரு பயனும் இல்லை. நீயோ ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலையாளாக இறைவனுக்குமுன் நிற்பதற்கு, உன்னால் இயன்ற எல்லா முயற்சியையும்செய்; வெட்கப்படாத வேலையாளாகவும், சத்தியத்தின் வார்த்தையை சரியாக கடைப்பிடிக்கிறவனாகவும் இருக்க முயற்சிசெய். பக்தியில்லாத பேச்சை விட்டுவிலகு. ஏனெனில் அதில் ஈடுபடுகிறவர்கள், இன்னும் அதிகதிகமாய் இறைவனை மறுதலிக்கிறவர்களாவார்கள். அவர்களுடைய போதனை புற்றுநோயைப்போல் பரவும். அவர்களுக்குள் இமெனேயும், பிலேத்தும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்துவிட்டது என அவர்கள் சொல்லி சிலரின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள். அப்படியிருந்தும், இறைவனின் உறுதியான அஸ்திபாரம் நிலைத்து நிற்கிறது: “தன்னுடையவர்களை கர்த்தர் அறிவார்” என்றும், “கர்த்தரின் பெயரை அறிக்கையிடுகிற ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயமாக விலகவேண்டும்” என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரு பெரிய வீட்டில் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்ல, மரத்தினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும் உண்டு. அவற்றில் சில சிறப்பான நோக்கத்திற்காகவும், சில சாதாரணமாகவும் உபயோகிக்கப்படுகின்றன. ஒரு மனிதன் மதிப்பற்ற காரியங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவானாகில், அவன் மதிப்புக்குரிய நோக்கங்களுக்கு ஏற்ற கருவியாவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு, எஜமானுக்கு உகந்தவனாகவும், எந்த நல்ல செயல்களைச் செய்வதற்கும் ஆயத்தம் பண்ணப்பட்டவனாகவும் இருப்பான்.
வாலிப பருவத்தின் தீமையான ஆசைகளைவிட்டு ஓடி, சுத்த இருதயத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோருடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித்தேடு. மதிகேடும் அறிவற்றதுமான விவாதங்களில் கலந்து கொள்ளாதே. ஏனெனில், அவை வாக்குவாதங்களையே உண்டுபண்ணுகின்றவை என்பது உனக்குத் தெரியும். கர்த்தரின் ஊழியக்காரன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் அவன் எல்லோரிடமும் தயவுள்ளவனாக, போதிக்கும் திறமையுள்ளவனாக, சகிப்புத்தன்மை உள்ளவனாக இருக்கவேண்டும். அவன் தன்னை எதிர்க்கிறவர்களை இறைவன் அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், கனிவாக அறிவுறுத்தவேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு அவர்களை வழிநடத்தி, அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். எனவே, பிசாசு தனது திட்டத்தைத் செய்ய, இவர்களை சிறைப்பிடித்திருக்கிற கண்ணியிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.