2 சாமுயேல் 8
8
தாவீதின் வெற்றிகள்
1சிறிது காலத்திற்குப்பின் தாவீது பெலிஸ்தியரை தோற்கடித்து, அவர்களை தனக்குக் கீழ்ப்படுத்தி, பெலிஸ்தியரின் கட்டுப்பாட்டில் இருந்த மேத்தேக் அம்மா என்ற பட்டணத்தைக் கைப்பற்றினான்.
2மேலும் தாவீது மோவாபியரையும் தோற்கடித்தான். அவன் அவர்களை தரையில் கிடத்தி, அளவிடும் கயிற்றினால் அளந்தான். ஒவ்வொரு இரண்டாம் அளவுக்குள் அடங்கியவர்களைக் கொன்று, ஒவ்வொரு மூன்றாம் அளவுக்குள் அடங்கியவர்களை உயிரோடு விட்டான். எனவே மோவாபியர் தாவீதுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டு அவனுக்கு வரி செலுத்தினார்கள்.
3மேலும், ரேகோபின் மகன் ஆதாதேசர் என்னும் சோபாவின் அரசன், யூப்ரட்டீஸ் நதியோரம் உள்ள பகுதியை திரும்பவும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் சென்றபோது, தாவீது அவனையும் தோற்கடித்தான். 4தாவீது அவனிடமிருந்த ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் தேரோட்டிகளையும், இருபதாயிரம் காலாட்படைகளையும் கைப்பற்றினான். அவற்றில் தேர் இழுக்கும் நூறு குதிரைகளைத்தவிர மற்ற குதிரைகளையெல்லாம் முடமாக்கினான்.
5சோபாவின் அரசன் ஆதாதேசருக்கு உதவும்படி தமஸ்குவைச் சேர்ந்த சீரியர் வந்தபோது, தாவீது அவர்களில் இருபத்திரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டான். 6அதன்பின் தமஸ்குவில் சீரிய அரசாட்சிப் பகுதியில் இராணுவ முகாம்களை அமைத்தான். சீரியர் தாவீதின் ஆட்சிக்குட்பட்டு அவனுக்கு வரி செலுத்தினார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
7தாவீது ஆதாதேசரின் அதிகாரிகளுக்குச் சொந்தமான தங்கக் கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டுவந்தான். 8ஆதாதேசருக்கு சொந்தமான பேத்தா, பேரொத்தாய் என்னும் பட்டணங்களிலிருந்து தாவீது அரசன் ஏராளமான வெண்கலத்தைக் கைப்பற்றினான்.
9ஆதாதேசருடைய படைகள் அனைத்தையும் தாவீது முறியடித்த செய்தியை ஆமாத்தின் அரசனான தோயீ கேள்விப்பட்டான். 10அப்பொழுது தோயீ தன்னோடு எப்போதும் எதிர்த்துப் போர் செய்த ஆதாதேசரை தாவீது வெற்றிகொண்டதால், அவனை நலம் விசாரிக்கவும், வாழ்த்துக்கூறவும் தன் மகன் யோராமை தாவீது அரசனிடம் அனுப்பினான். யோராம் தன்னுடன் தங்கம், வெள்ளி, வெண்கலத்தினாலான பொருட்களை எடுத்துவந்தான்.
11தாவீது அரசன் தான் கீழ்ப்படுத்திய நாடுகளிலிருந்து கைப்பற்றிய வெள்ளியையும், தங்கத்தையும் யெகோவாவுக்கு அர்ப்பணம் செய்ததுபோலவே, யோராம் கொண்டுவந்தவற்றையும் செய்தான். 12ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகியோரையே அவன் கீழ்ப்படுத்தியிருந்தான். அத்தோடு ரேகோபின் மகனாகிய சோபாவின் அரசன் ஆதாதேசரிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்களையும் யெகோவாவுக்கு அர்ப்பணித்தான்.
13தாவீது உப்புப் பள்ளத்தாக்கிலே, பதினெட்டாயிரம் ஏதோமியரைக் கொன்று திரும்பியபின் அவன் பிரபலம் அடைந்தான்.
14தாவீது ஏதோம் முழுவதிலும் இராணுவ முகாம்களை ஏற்படுத்தினான். ஏதோமியர் அனைவரும் தாவீதுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டார்கள். தாவீது சென்ற இடங்களிலெல்லாம் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார்.
தாவீதின் அலுவலர்கள்
15தாவீது தனது எல்லா மக்களுக்கும் நீதியையும், நியாயத்தையும் செய்து, இஸ்ரயேலர் அனைவரையும் ஆட்சிசெய்தான். 16செருயாவின் மகன் யோவாப் படைகளுக்குத் தலைவனாயிருந்தான்#8:16 படைகளுக்குத் தலைவனாயிருந்தான் அல்லது அரச செய்தித் தொடர்பாளர்.. அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாயிருந்தான். 17அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் ஆசாரியர்களாய் இருந்தார்கள். செராயா செயலாளனாக இருந்தான். 18யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான். தாவீதின் மகன்கள் ஆசாரியர்களாய்#8:18 அல்லது எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் அரச ஆலோசகர்களாய் என்றுள்ளது. 1 நாளா. 18:17 இருந்தார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 சாமுயேல் 8: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.