2 சாமுயேல் 4
4
இஸ்போசேத் கொலைசெய்யப்படுதல்
1அப்னேர் எப்ரோனிலே கொலைசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட சவுலின் மகன் இஸ்போசேத் தன் தைரியத்தை இழந்தான். இஸ்ரயேலர் எல்லோரும் திகிலடைந்தார்கள். 2கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவர்களான இருவர் சவுலின் மகனுக்கு இருந்தனர். ஒருவன் பெயர் பானா, மற்றவன் பெயர் ரேகாப். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தில் பேரோத்தியனான ரிம்மோனின் மகன்கள். பேரோத்தும் பென்யமீன் கோத்திரத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டது. 3ஏனெனில் பேரோத்தியர் கித்தாயீமுக்கு தப்பி ஓடிப்போய் அங்கே அந்நியராய் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள்.
4சவுலின் மகன் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருந்தான்; சவுலும், யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிருந்து வந்தபோது, அவன் ஐந்து வயதுடையவனாயிருந்தான். அவனுடைய தாதி அவனைத் தூக்கிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுத் தப்பி, ஓடியவேகத்தில் அவன் விழுந்தபோதே அவன் முடவனானான். அவன் பெயர் மேவிபோசேத்.
5பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்குப் போகப் புறப்பட்டார்கள். மத்தியான வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். 6அவர்கள் இருவரும் கோதுமையை வாங்க வருகிறவர்கள்போல இஸ்போசேத்தின் வீட்டின் உட்பகுதிக்குச் சென்று அவனுடைய வயிற்றில் குத்தினார்கள். பின் பானாவும் அவன் சகோதரன் ரேகாபும் தப்பி ஓடிவிட்டார்கள்.#4:6 அல்லது கோதுமையை சலித்துக்கொண்டிருந்த வீட்டுக்காரர் மயக்கமடைந்து தூங்கிவிட்டார். எனவே ரேகாபும் பானாவும் அவளைக் கடந்தார்கள்.
7இஸ்போசேத் தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருக்கும் போதுதான் அவர்கள் உள்ளே போனார்கள். அவனைக் குத்திக் கொன்றபின் அவன் தலையை வெட்டி அதை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அரபா#4:7 அரபா அல்லது யோர்தான் பள்ளத்தாக்கு. வழியாகப் பயணம் செய்தார்கள். 8பின்பு அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எப்ரோனில் இருந்த தாவீது அரசனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனிடம், “இதோ உமது உயிரை வாங்கத்தேடிய, உமது பகைவனான சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை. இன்றைய தினம் யெகோவா என் தலைவனான அரசருக்காக சவுலையும் அவன் பிள்ளைகளையும் பழிவாங்கினார்” என்றார்கள்.
9அதற்குத் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபிடமும் அவன் சகோதரனான பானாவிடமும், “என்னை எல்லா இக்கட்டுகளிலும் இருந்து மீட்டுக்கொண்ட யெகோவா இருப்பது நிச்சயமெனில், 10ஒரு மனிதன் நற்செய்தி கொண்டுவருவதாக என்னிடம் வந்து, ‘சவுல் இறந்துபோனான்’ என்று எனக்குச் சொன்னபோது, நான் அவனைப் பிடித்து சிக்லாக்கிலே கொலைசெய்ததும் நிச்சயம். அதுவே அவன் கொண்டுவந்த நற்செய்திக்கு நான் கொடுத்த வெகுமதி. 11அப்படியிருக்கத் தனது வீட்டிற்குள் தன் படுக்கையில் படுத்திருந்த குற்றமற்ற ஒரு மனிதனைக் கொலைசெய்த கொடிய மனிதருக்கு நான் எவ்வளவு கடுமையாகத் தண்டனை கொடுக்கவேண்டும்? உங்களைப் பூமியில் இருந்து அழித்து அவனுடைய இரத்தத்திற்காக உங்களைப் பழிவாங்கமாட்டேனோ!” என்றான்.
12தாவீது அவனுடைய மனிதருக்குக் கட்டளையிட்டதும் அவர்கள் அந்த இருவரையும் கொன்றனர். பின்னர் அவர்களுடைய கைகளையும், கால்களையும் வெட்டி உடல்களை எப்ரோனில் உள்ள குளத்தருகில் தொங்கவிட்டார்கள். ஆனால் இஸ்போசேத்தின் தலையை எடுத்துச்சென்று எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 சாமுயேல் 4: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.