2 இராஜாக்கள் 4
4
விதவையின் எண்ணெய்
1ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டத்திலுள்ள ஒருவனின் மனைவி எலிசாவை நோக்கி, “உமது அடியானான எனது கணவன் இறந்துவிட்டார். அவர் யெகோவாவிடத்தில் பயபக்தியாய் இருந்தார் என்பது உமக்குத் தெரியும். இப்போது அவருடைய கடன்காரன் என்னுடைய இரு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்குவதற்கு கூட்டிக்கொண்டுபோக வந்திருக்கிறான்” என்றாள்.
2அப்பொழுது எலிசா அவளைப் பார்த்து, “நான் உனக்கு எப்படி உதவிசெய்யலாம்? வீட்டில் உன்னிடம் என்ன உண்டு? எனக்குச் சொல்” என்று கேட்டான்.
அதற்கு அவள், “ஒரு ஜாடி எண்ணெயைத் தவிர உமது அடியவளின் வீட்டில் வேறு ஒன்றுமே இல்லை” என்று கூறினாள்.
3அப்பொழுது எலிசா, “நீ போய் உன் அயல் வீட்டுக்காரர் எல்லாரிடமிருந்தும் வெறும் ஜாடிகளைக் கேட்டு வாங்கு. அதிகளவு ஜாடிகளைக் கேட்டு வாங்கு. 4அதன்பின் நீயும் உன் மகன்களும் வீட்டின் உள்ளே போய், கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். பின்பு எண்ணெயை எல்லா ஜாடிகளிலும் ஊற்றுங்கள். ஒவ்வொன்றும் நிரம்பியவுடன், ஒரு பக்கத்தில் அவற்றை எடுத்துவையுங்கள்” என்றான்.
5அவள் அவனிடமிருந்து போய், மகன்களுடன் வீட்டினுள்ளே போய் கதவைப் பூட்டினாள். அவளுடைய மகன்கள் ஜாடிகளைக் கொடுக்கக் கொடுக்க அவள் எண்ணெயை ஊற்றிக்கொண்டேயிருந்தாள். 6எல்லா ஜாடிகளும் நிரம்பியபோது, அவள் தன் மகனைப் பார்த்து, “மற்றொரு ஜாடி கொண்டுவா” என்றாள்.
“இனிமேல் வேறு ஜாடி இல்லை” என்று அவன் கூறியபோது எண்ணெய் நின்றுவிட்டது.
7அவள் போய் இறைவனுடைய மனிதனிடம் அதைக்கூறியபோது அவன் அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்திடு. நீயும் உன் மகன்களும் மீதியாயிருப்பதைக் கொண்டு வாழலாம்” என்றான்.
சூனேமியாளும் மகனும்
8ஒரு நாள் எலிசா சூனேம் என்ற ஊருக்குப் போனான். அங்கு ஒரு செல்வம் மிகுந்த பெண் இருந்தாள். அவள் அவனை சாப்பிடவரும்படி வருந்தி அழைத்தாள். அதன்பின்பு அவ்வழியில் அவன் போகும்போதெல்லாம் அங்கே சாப்பிடுவதற்காகத் தங்குவான். 9அவள் தன் கணவனிடம், “இந்த வழியாக வந்து இங்கு தங்கிப்போகும் மனிதன், இறைவனுடைய பரிசுத்த மனிதன் என்பது எனக்குத் தெரிகிறது. 10நாங்கள் எங்கள் வீட்டுக்குமேல் ஒரு அறையைக் கட்டி, ஒரு கட்டில், மேஜை, நாற்காலி, விளக்கு ஆகியவற்றை அவருக்கு வைப்போம். அதனால் எங்களிடம் வரும்போதெல்லாம் அங்கேயே அவர் தங்கியிருக்கலாம்” என்றாள்.
11ஒரு நாள் எலிசா அங்கு வந்தபோது மேலே தன் அறைக்குப் போய் அங்கே படுத்திருந்தான். 12தன் வேலைக்காரனான கேயாசிடம், “அந்த சூனேமியாளை அழைத்து வா” என்றான். அவன் போய் அவளை அழைத்துவர, அவள் வந்து எலிசாவுக்கு முன் நின்றாள். 13அப்பொழுது எலிசா கேயாசியைப் பார்த்து, “நீ அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாய். உனக்கு நாங்கள் என்ன செய்யலாம்? உனது சார்பாக அரசனிடமோ அல்லது இராணுவத் தளபதியிடமோ நாங்கள் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அதைச் சொல்’ என்று அவளிடம் கேள்” என்றான்.
அவள் அதற்குப் பதிலாக, “நான் என் சொந்த மக்கள் மத்தியில் குடியிருக்க எனக்கு வீடு இருக்கிறது” என்றாள்.
14அப்பொழுது எலிசா கேயாசிடம், “அவளுக்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.
அதற்கு கேயாசி, “அவளுக்கு ஒரு மகன் இல்லை. அவளுடைய கணவனும் வயதுசென்றவனாக இருக்கிறான்” என்றான்.
15எலிசா அவனிடம், “அவளைக் கூப்பிடு” என்றான். கேயாசி அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து கதவுக்குப் பக்கத்தில் நின்றாள். 16எலிசா அவளைப் பார்த்து, “அடுத்த வருடம் இந்த நேரத்தில் உன் கைகளில் ஒரு மகனை ஏந்திக்கொண்டிருப்பாய்” என்றான்.
அப்பொழுது அவள், “என் தலைவனே! இறைவனுடைய மனிதனே, உமது அடியவளைத் தவறாக வழிநடத்த வேண்டாம்” என்றாள்.
17ஆனால் அவளோ எலிசா முன்கூறியபடியே கர்ப்பமாகி அடுத்த வருடம் அதே காலத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.
18அந்தப் பிள்ளை வளர்ந்து வந்தான். ஒரு நாள் அவன் கதிர் அறுக்கிறவர்களுடன் நின்றுகொண்டிருந்த தன் தகப்பனிடம் போனான். 19அந்நேரம் அவன் தன் தகப்பனிடம், “என் தலை! என் தலை வலிக்கிறது” என்று அழுதான்.
அவனுடைய தகப்பன் ஒரு வேலையாளிடம், “இவனை இவனுடைய தாயிடம் தூக்கிக்கொண்டு போ” என்றான். 20அந்த வேலைக்காரன் அப்பிள்ளையைத் தூக்கி அவனுடைய தாயிடம் கொண்டுபோனான். மத்தியானம்வரை தாய் அவனைத் தன் மடியில் வைத்திருந்தாள். மதிய நேரத்தில் அவன் இறந்துபோனான். 21அவள் மேலே போய் இறைவனுடைய மனிதனின் கட்டிலில் மகனைக் கிடத்திவிட்டு, கதவைப் பூட்டி வெளியே போனாள்.
22அவள் தன் கணவனைக் கூப்பிட்டு, “தயவுசெய்து உம்முடைய வேலையாட்களில் ஒருவனையும், ஒரு கழுதையையும் அனுப்பும். நான் இறைவனுடைய மனிதனிடம் அவசரமாகப் போய்த் திரும்பி வரவேண்டும்” என்றாள்.
23அப்பொழுது அவன், “ஏன் இன்று அவரிடம் போகிறாய்? இன்று ஓய்வுநாளல்ல; அமாவாசை நாளும் அல்ல” என்று கேட்டான்.
அதற்கு அவள், “அது பரவாயில்லை. நான் போகவேண்டியிருக்கிறது” என்று கூறினாள்.
24கழுதையில் சேணம் கட்டி, வேலைக்காரனைப் பார்த்து, “விரைவாகப் போ, நான் சொன்னாலொழிய வேகத்தைக் குறைக்காதே” என்று சொன்னாள். 25அந்தப்படியே அவள் புறப்பட்டு கர்மேல் மலையில் இருந்த இறைவனுடைய மனிதனிடம் போனாள்.
இறைவனின் மனிதன் தூரத்திலே அவளைக் கண்டு தன் வேலைக்காரனான கேயாசியைப் பார்த்து, “பார்! அதோ சூனேமியாள். 26நீ அவளைச் சந்திக்கும்படியாக ஓடிப்போய் அவளிடம், ‘நீ சுகமாயிருக்கிறாயா? உன் கணவன் சுகமாயிருக்கிறானா? உன் பிள்ளை சுகமாயிருக்கிறானா?’ ” என்று கேள் என்றான்.
அவள், “நாங்கள் எல்லோரும் சுகமாயிருக்கிறோம்” என்று கூறினாள்.
27அவள் மலையின்மேல் இருந்த இறைவனுடைய மனிதனிடம் வந்தபோது, அவனுடைய கால்களைப் பிடித்துக்கொண்டாள். கேயாசி அவளை அப்பால் தள்ளிவிடுவதற்காக முன்பாக வந்தபோது இறைவனுடைய மனிதன் அவனைப் பார்த்து, “அவளை விடு, அவளுடைய ஆத்துமா வேதனையால் கசப்படைந்திருக்கிறது. ஆனால் யெகோவா அதை எனக்கு மறைத்ததோடு ஏன் என்றும் எனக்குச் சொல்லவில்லை” என்றான்.
28அப்பொழுது அவள், “என் தலைவனே, எனக்கு ஒரு மகன் வேண்டுமென்று நான் உம்மிடம் கேட்டேனா? எனக்கு அதிக எதிர்பார்ப்பைக் கொடுக்கவேண்டாமென்று நான் உமக்குச் சொல்லவில்லையா?” என்றாள்.
29எலிசா கேயாசியிடம்: “உன் மேலுடையைப் பட்டிக்குள் சொருகிக்கொண்டு என் தடியையும் எடுத்துக்கொண்டு ஓடு. யாரையாகிலும் நீ சந்தித்தால் அவனை வாழ்த்தாதே. யாராவது உன்னை வாழ்த்தினால் நீ மறுமொழி கொடுக்காதே. நீ ஓடிப்போய் பையனின் முகத்தின்மேல் என் தடியை வை” என்றான்.
30ஆனால் அந்தப் பிள்ளையின் தாயோ எலிசாவைப் பார்த்து, “யெகோவா வாழ்கிறதும், நீர் வாழ்கிறதும் நிச்சயம்போலவே நான் உம்மை விட்டுப் போகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றாள். எனவே அவன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தான்.
31கேயாசி அவர்களுக்குமுன் போய், எலிசாவின் தடியைப் பையனின் முகத்தின்மேல் வைத்தான். ஆனால் எந்த விதமான சத்தமோ, பதிலோ வரவில்லை. அதனால் கேயாசி திரும்பிப்போய் எலிசாவைச் சந்தித்து, “பையன் கண்விழிக்கவில்லை” எனக் கூறினான்.
32எலிசா வீட்டுக்கு வந்தபோது அவனுடைய கட்டிலின்மேல் அந்தப் பையன் இறந்து கிடந்தான். 33அவன் உள்ளே போய் இருவரையும் வெளியே விட்டுக் கதவைப் பூட்டி யெகோவாவை நோக்கி மன்றாடினான். 34அதன்பின் அவன் கட்டிலின்மேல் ஏறி அந்தப் பையனின் வாயோடு வாயும், கண்களோடு கண்களும், கைகளோடு கைகளுமாக வைத்து பையனின்மேல் படுத்தான். உடனே அந்தப் பையனின் உடல் சூடாகியது. 35எலிசா எழுந்து தன் அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான். அதன்பின் கட்டிலில் ஏறி பையனின்மேல் இன்னொருமுறை முன்போல படுத்தான். அப்பொழுது அந்தப் பையன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான்.
36அப்பொழுது எலிசா கேயாசியை வரும்படி அழைத்து, “சூனேமியாளைக் கூப்பிடு” என்றான். அவன் அப்படியே செய்தான். அவள் வந்தபோது எலிசா, “உன் மகனைக் கூட்டிக்கொண்டுபோ” என்றான். 37அவள் உள்ளே வந்து எலிசாவின் கால்களில் விழுந்து தரைமட்டும் பணிந்தாள். பின்பு தன் மகனைக் கூட்டிக்கொண்டு வெளியே போனாள்.
கூழ் பானைக்குள் நஞ்சு
38எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போனான், அப்போது அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டம் வந்து அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவன் தன் வேலையாளைப் பார்த்து, “அந்தப் பெரிய பானையை அடுப்பில் வைத்து இந்த மனிதருக்குக் கொஞ்சம் கூழ் காய்ச்சு” என்றான்.
39அவர்களில் ஒருவன் வயல்வெளிக்கு மூலிகைச் செடிகளைப் பறிப்பதற்காக போகையில், ஒரு காட்டுக் கொம்மட்டிக் கொடியைக் கண்டான். அதன் காய்களைப் பிடுங்கி தன் மடியை நிரப்பினான். அவன் திரும்பிவந்தபோது, அவை என்ன காய்கள் என்று ஒருவரும் அறியாதிருந்தும் அவைகளை வெட்டி கூழிருந்த பானைக்குள் போட்டான். 40அதன்பின் அவர்கள் கூழ் குடிப்பதற்காக எல்லோருக்கும் அதை ஊற்றிக் கொடுத்தார்கள். அவர்கள் அதைக் குடிக்கத் தொடங்கியவுடனேயே, “இறைவனுடைய மனுஷனே! பானைக்குள் சாவு இருக்கிறது” என்று பலமாகக் கத்தினார்கள். அதை அவர்களால் குடிக்க முடியவில்லை.
41அப்பொழுது எலிசா அவர்களிடம், “சிறிது மாவைக் கொண்டுவாருங்கள்” என்றான். அதை அவன் அந்தப் பானைக்குள் போட்டு, “இப்பொழுது இதை இந்த மனிதருக்குப் பரிமாறுங்கள், அவர்கள் குடிக்கட்டும்” என்றான். அதன்பின் எந்த விதமான தீங்கும் பானைக்குள் இருக்கவில்லை.
நூறுபேருக்கு உணவளித்தல்
42ஒரு மனிதன் பாகால் சாலீஷாவிலிருந்த இறைவனுடைய மனிதனுக்கு தன் விளைச்சலின் முதற்பலனிலிருந்து தயாரிக்கப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், கொஞ்சம் புதிய தானியக் கதிர்களையும் சாக்குப்பையில் கொண்டுவந்தான். அப்பொழுது எலிசா, “இதை இந்த மக்களுக்குச் சாப்பிடக் கொடு” என்றான்.
43அப்பொழுது அவனுடைய வேலையாள், “இதை நான் எப்படி நூறு பேருக்குப் பங்கிடுவேன்” என்று கேட்டான்.
ஆனால் எலிசா அதற்கு, “அதை இந்த மக்களுக்குச் சாப்பிடும்படி கொடு. ஏனென்றால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் சாப்பிட்டு கொஞ்சம் மீதமும் இருக்கும்’ என்கிறார்” என்றான். 44அப்படியே அவன் அதை அவர்களுக்குப் பரிமாறினான். யெகோவாவின் வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டு சில மீதியாயும் விடப்பட்டிருந்தன.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 இராஜாக்கள் 4: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.