1 சாமுயேல் 3:3-10

1 சாமுயேல் 3:3-10 TCV

இறைவனுடைய விளக்கு இன்னும் அணையாதிருக்கும்போதே, சாமுயேல் யெகோவாவினுடைய பெட்டி இருந்த இடமான இறைவனின் ஆலயத்தில் படுத்திருந்தான். அவ்வேளையில் யெகோவா சாமுயேலைக் கூப்பிட்டார். அதற்கு சாமுயேல், “இதோ, நான் இங்கே இருக்கிறேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடிப்போய், “என்னைக் கூப்பிட்டீரே. இதோ இருக்கிறேன்” என்றான். அதற்கு ஏலி, “நான் உன்னைக் கூப்பிடவில்லை. நீ திரும்பிப்போய் படுத்துக்கொள்” என்றான். எனவே அவன் போய் படுத்துக்கொண்டான். யெகோவா மறுபடியும், “சாமுயேல்” எனக் கூப்பிட்டார். சாமுயேல் எழுந்து ஏலியிடம் போய், “என்னைக் கூப்பிட்டீரே? இதோ இருக்கிறேன்” என்றான். அதற்கு ஏலி, “என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப் போய்ப் படுத்துக்கொள்” என்றான். சாமுயேல் இன்னும் யெகோவாவை அறியவில்லை. இதுவரை யெகோவாவின் வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. யெகோவா மூன்றாம் முறையும் சாமுயேலைக் கூப்பிட்டார்; அவன் எழுந்து மறுபடியும் ஏலியிடம் வந்து அவனிடம், “என்னைக் கூப்பிட்டீரே; இதோ இருக்கிறேன்” என்றான். அப்பொழுது யெகோவாவே சிறுவனைக் கூப்பிடுகிறார் என ஏலி அறிந்துகொண்டான். எனவே ஏலி சாமுயேலிடம், “நீ போய் படுத்துக்கொள். அவர் உன்னைக் கூப்பிட்டால், ‘யெகோவாவே பேசும், உமது அடியேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். அப்படியே சாமுயேல் போய் தன் இடத்தில் படுத்துக்கொண்டான். அப்பொழுது யெகோவா வந்து அங்கு நின்று, முன் கூப்பிட்டதுபோல், “சாமுயேல், சாமுயேல்” என்று கூப்பிட்டார். அதற்கு சாமுயேல், “பேசும்; அடியேன் கேட்கிறேன்” என்றான்.