1 சாமுயேல் 16:7-12

1 சாமுயேல் 16:7-12 TCV

ஆனால் யெகோவா சாமுயேலிடம், “இவனுடைய தோற்றத்தையும், உயரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டாம். நான் இவனைப் புறக்கணித்து விட்டேன். ஏனெனில் மனிதர் பார்ப்பதைப் போல் யெகோவா பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்ப்பான். யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று சொன்னார். அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்துச் சாமுயேலுக்கு முன்னால் போகச்செய்தான். சாமுயேலோ, “யெகோவா இவனைத் தெரிந்துகொள்ளவில்லை” என்றான். அப்பொழுது ஈசாய் சம்மாவைச் சாமுயேல் முன்னால் போகும்படி செய்தான். “இவனையும் யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். இவ்வாறு ஈசாய் தன் ஏழு மகன்களையும் சாமுயேல் முன் கொண்டுவந்தான். ஆனால், “இவர்களை யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். மேலும் சாமுயேல் ஈசாயிடம், “உன்னுடைய மகன்கள் இவர்கள் மட்டும்தானா?” என்று கேட்டான். அதற்கு அவன், “இன்னும் எல்லோருக்கும் இளையமகன் ஒருவன் இருக்கிறான். அவன் இப்பொழுது செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான். அப்பொழுது சாமுயேல் ஈசாயிடம், “அவனை அழைத்துவர ஆளனுப்பு. அவன் இங்கு வருமட்டும் நாம் பந்தியிருக்க மாட்டோம்” என்றான். எனவே ஈசாய் ஆளனுப்பி அவனை வரவழைத்தான். அவன் சிவந்த உடலும், அழகிய முகமும், வசீகரத் தோற்றமும் உடையவனாயிருந்தான். அப்பொழுது யெகோவா சாமுயேலிடம், “நான் சொன்னவன் இவன்தான். நீ எழுந்து இவனை அபிஷேகம் செய்” என்றார்.