1 யோவான் 4:10-21

1 யோவான் 4:10-21 TCV

இதுவே அன்பு: நாம் இறைவனிடம் அன்பாயிருக்கவில்லை. ஆனால் அவர் நம்மில் அன்புகாட்டி, நம்முடைய பாவங்களுக்கான நிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பினார். அன்பான நண்பரே, இறைவன் நம்மேல் இவ்வளவு அன்பாயிருந்தபடியால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும். ஒருவனும் இறைவனை ஒருபோதும் கண்டதில்லை: ஆனால் நாம், ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், இறைவன் நம்மில் குடிகொண்டிருக்கிறார். அவருடைய அன்பும் நம்மில் முழுநிறைவாகிறது. இறைவன் தமது ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் இறைவனில் வாழுகிறோம் என்றும், அவர் நம்மில் வாழுகிறார் என்றும்: நாம் அறிகிறோம். பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம். யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால், இறைவன் அவனில் வாழ்கிறார்; அவனும் இறைவனில் வாழ்கின்றான். இவ்வாறு இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, நாம் அறிந்தும் இருக்கிறோம். அதை நாம் நம்பியும் இருக்கிறோம். இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் வாழ்கிறவன், இறைவனில் வாழ்கிறான், இறைவனும் அவனில் வாழ்கிறார். இவ்விதமாய், அன்பு நமக்குள் முழுநிறைவாய் வளர்கிறது. இதனால், நாம் நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியுடையவர்களாய் இருப்போம். ஏனெனில், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம். இப்படிப்பட்ட அன்பு இருக்கையில் பயத்திற்கு இடமில்லை. ஏனெனில், முழுநிறைவான அன்பு பயத்தை விரட்டிவிடும். ஆனால், பயம் தண்டனைத் தீர்ப்புடன் சம்பந்தப்படுகிறது. எனவே பயப்படுகிறவன் அன்பில் முழுநிறைவு பெற்றவனல்ல என்று காட்டுகிறது. முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம். “நான் இறைவனில் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற யாராவது தனது சகோதரனை வெறுத்தால், அவன் ஒரு பொய்யன். ஏனெனில், தான் காண்கின்ற தன் சகோதரனில் அன்பாயிராத ஒருவனால், தான் காணாத இறைவனில் அன்பாயிருக்க முடியாது. இதனாலேயே, இறைவனிடத்தில் அன்பாயிருக்கிறவன் யாரோ அவன் தன் சகோதரனிடத்திலும் சகோதரியிடத்திலும் அன்பாயிருக்கவேண்டும் என்கிற கட்டளையை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.