1 கொரிந்தியர் 1:18-25

1 கொரிந்தியர் 1:18-25 TCV

அழிவின் பாதையில் போகிறவர்களுக்கு சிலுவையின் செய்தி மூடத்தனமாகவே தோன்றுகிறது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. ஆகவேதான், “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து; அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. ஞானி எங்கே? வேத ஆசிரியர் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? உலக ஞானத்தை இறைவன் மூடத்தனமாக்கவில்லையோ? உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார். யூதர்கள் அற்புத அடையாளங்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். ஆனால் நாங்களோ, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்: இது யூதருக்கு இடறச்செய்யும் தடையாயும், யூதரல்லாதவருக்கு மூடத்தனமாயும் இருக்கிறது. ஆனால், யூதரிலும் கிரேக்கரிலும் இறைவனால் அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும், இறைவனின் ஞானமுமாக இருக்கிறார். ஏனெனில் இறைவனின் மூடத்தனமோ மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பெலவீனமோ மனித பெலத்திலும் மிகுந்த பெலனுள்ளதாயிருக்கிறது.