நெகே 12:27-43

நெகே 12:27-43 IRVTAM

எருசலேமின் மதிலை பிரதிஷ்டைசெய்யும்போது, துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியர்களை எருசலேமுக்குக் கூட்டிவரத் தேடினார்கள். அப்படியே பாடகர்களின் குழுவினர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியர்களின் கிராமங்களிலும், பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்து வந்து கூடினார்கள்; பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள். ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைச் சுத்தம்செய்துகொண்டு, மக்களையும் பட்டணவாசல்களையும் மதிலையும் சுத்தம்செய்தார்கள். அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை மதிலின்மேல் ஏறச்செய்து, துதிசெய்து நடந்துபோவதற்காக இரண்டு பெரிய கூட்டத்தார்களை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் மதிலின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள். அவர்கள் பின்னே ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேர்களும், அசரியா, எஸ்றா, மெசுல்லாம், யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும், பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியர்களின் மகன்களில் ஆசாப்பின் மகன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்கு மகனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் மகன் சகரியாவும், தேவனுடைய மனிதனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவனுடைய சகோதரர்களான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான். அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான தண்ணீர்வாசலுக்கு வந்தபோது, மதிலைவிட உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின் மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர்வாசல்வரை போனார்கள். துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாக நடந்துபோனார்கள், அவர்கள் பின்னே நான் போனேன்; மக்களில் பாதிப்பேர் மதிலின்மேல் சூளைகளின் கோபுரத்தைக் கடந்து, அகழ் மதில்வரை நேராகப்போய், எப்பிராயீம்வாசலையும், பழையவாசலையும், மீன்வாசலையும், அனானெயேலின் கோபுரத்தையும், மேயா என்கிற கோபுரத்தையும் கடந்து, ஆட்டுவாசல்வரை புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள். அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தார்களும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடு இருக்கிற தலைவர்களில் பாதிப்பேர்களும், பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா என்கிற ஆசாரியர்களும், மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகர்களும், அவர்களை நடத்துகிறவனாகிய யெஷரகியாவும் சத்தமாகப் பாடினார்கள். அந்த நாளிலே அதிகமான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்குப் பெரிய சந்தோஷத்தை உண்டாக்கியதால் மகிழ்ச்சியாக இருந்தார்கள்; பெண்களும் பிள்ளைகளும்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

நெகே 12:27-43 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்