இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள். ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்? இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன். இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான். அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்; அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார். அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள். அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி; மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார். அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள். அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது. நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.