இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால், அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு. இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.