லூக் 4:1-32

லூக் 4:1-32 IRVTAM

இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசி உண்டானது. அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான். இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலும் உமக்கு அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் என்னுடைய பொறுப்பில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுப்பேன். நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார். அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இங்கேயிருந்து கீழே குதியும். ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார். சாத்தான், இயேசுவை பலவிதங்களில் சோதித்துமுடித்தபின்பு சிலகாலம் அவரைவிட்டு விலகிப்போனான். பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது. அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார். ஒரு நாள் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது: யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து. அதை வாசித்து, பின்பு புத்தகத்தைச் சுருட்டி, பணிவிடை செய்பவனிடம் கொடுத்து உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லோரும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு பேசத்தொடங்கி: “நீங்கள் கேட்ட இந்த வேதவாக்கியம் இன்று நிறைவேறியது” என்றார். எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: “நீங்கள் என்னிடம், வைத்தியனே, உன்னைநீயே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமில் நீ செய்த செயல்களையெல்லாம் உன் சொந்த ஊராகிய இங்கேயும் செய் என்று சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். ஆனாலும் ஒரு தீர்க்கதரிசியை அவனுடைய சொந்த ஊரிலே ஒருவனும் அங்கீகரிக்கமாட்டான் என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அன்றியும் எலியா தீர்க்கதரிசி வாழ்ந்த நாட்களிலே மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு மழை இல்லாமல், தேசமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலில் அநேக விதவைகள் இருந்தார்கள். இருந்தாலும், எலியா தீர்க்கதரிசி, இவர்களில் எந்தவொரு யூதவிதவையிடமும் அனுப்பப்படாமல், சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா என்னும் ஊரில் இருந்த ஒரு விதவையிடம் அனுப்பப்பட்டான். அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலில் அநேக குஷ்டரோகிகள் இருந்தார்கள்; இருந்தாலும் சீரியா தேசத்தைச் சேர்ந்த நாகமானைத்தவிர அவர்களில் வேறு ஒருவனையும் எலிசா சுத்தமாக்கவில்லை என்று சத்தியத்தின்படி உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும், இவைகளைக் கேட்டபொழுது, கடும்கோபமடைந்து, எழுந்திருந்து, அவரை ஊருக்கு வெளியே தள்ளி, தங்களுடைய ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் உச்சியிலிருந்து அவரைத் தலைகீழாகத் தள்ளிவிடுவதற்காக அந்த இடத்திற்குக் கொண்டுபோனார்கள். ஆனால், அவர் அவர்கள் நடுவில் இருந்து கடந்துபோய்விட்டார். பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் மக்களுக்குப் போதனை பண்ணினார். அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாக இருந்தபடியால் அவருடைய போதனையைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.