யோவா 3:19-36

யோவா 3:19-36 IRVTAM

ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார். சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை. அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது. அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான். நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர். தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான். தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.