எபி 12:18-29

எபி 12:18-29 IRVTAM

அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும், எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள். ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள். மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது. நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும், பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும், புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள். பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்? அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது. ஆகவே, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும். நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.