கலா 2:14-21

கலா 2:14-21 IRVTAM

இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்? யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே. நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன். தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.