கலா 2

2
அத்தியாயம் 2
பவுல் எருசலேமுக்குச் செல்லுதல்
1பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன். 2நான் தேவ அறிவிப்பினாலே அங்குபோய், யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்; ஆனாலும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகப் போகாதபடி சபையை நடத்துகிற தலைவர்களுக்கே தனிமையாக விளக்கிச் சொன்னேன். 3ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை. 4கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது. 5நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. 6அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே. 7அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால், 8விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து; 9எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து, 10ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன்.
பவுல் பேதுருவை எதிர்த்தல்
11மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன். 12எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். 13மற்ற யூதர்களும் அவனோடுகூட இணைந்து மாய்மாலம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாய்மாலத்தினாலே பர்னபாவும் ஈர்க்கப்பட்டான். 14இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்? 15யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். 16நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. 17கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே. 18நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன். 19தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. 20கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். 21நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

கலா 2: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்