எசேக் 27
27
அத்தியாயம் 27
தீருவுக்கான புலம்பல்
1யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: 2மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின் பெயரிலே புலம்பி, 3கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய். 4கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள். 5சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன்னுடைய கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படி லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். 6பாசானின் கர்வாலிமரங்களினாலே உன்னுடைய துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன்னுடைய தளங்களை செய்து, அதிலே யானைத்தந்தம் பதித்திருந்தார்கள். 7எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது. 8சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் துடுப்பு போடுகிறவர்களாக இருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன்னுடைய அறிஞர்கள் உன்னுடைய மாலுமிகளாக இருந்தார்கள். 9கேபாரின் முதியோரும் அதனுடைய அறிஞர்களும் உன்னில் பழுதுபார்க்கும் வேலை செய்கிறவர்களாக இருந்தார்கள்; கடலின் எல்லா கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரர்களும் உன்னுடன் தொழில்துறை வியாபாரம் செய்கிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள். 10பெர்சியர்களும், லூதியர்களும், பூத்தியர்களும் உன்னுடைய படையில் போர்வீரர்களாக இருந்து உனக்குள் கேடகமும் தலைகவசமும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள். 11அர்வாத்திரர்கள் உன்னுடைய படைவீரர்களும் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர்கள் உன்னுடைய மதில்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன்னுடைய மதில்கள்மேல் சுற்றிலும் தங்களுடைய கேடயங்களைத் தூக்கிவைத்து, உன்னுடைய வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள். 12எல்லாவித அதிகமான பொருள்களினாலும் தர்ஷீஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன்னுடைய சந்தைகளில் விற்க வந்தார்கள். 13யாவான், தூபால், மேசேக் என்னும் இனத்தார்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்து, மனிதர்களையும் வெண்கலப் பாத்திரங்களையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். 14தொகர்மா நகரத்தார்கள் குதிரைகளையும் குதிரைவீரர்களையும் கோவேறுகழுதைகளையும் உன்னுடைய சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள். 15தேதானியர்கள் உன்னுடைய வியாபாரிகளாக இருந்தார்கள்; அநேகம் தீவுகளின் மொத்தவியாபாரம் உன்னுடைய கையில் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப்பதிலாகக் கொண்டுவந்தார்கள். 16சீரியர்கள் உன்னுடைய வேலைப்பாடான பற்பல பொருள்களுக்காக உன்னுடன் வியாபாரம்செய்து, மரகதங்களையும், சிவப்புகளையும், சித்திரத்தையலாடைகளையும், விலைஉயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும் உன்னுடைய சந்தைகளில் விற்கவந்தார்கள். 17யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். 18தமஸ்கு உன்னுடைய வேலைகளான பற்பல பொருள்களுக்காக, எல்லாவித அதிகமான பொருட்களினால் உன்னுடன் வியாபாரம்செய்து, கெல்போனின் திராட்சைரசத்தையும் வெண்மையான ஆட்டு ரோமத்தையும் உனக்கு விற்றார்கள். 19தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள். 20இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக் கம்பளங்களை தேதானின் மனிதர்கள் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். 21அரபியர்களும், கேதாரின் எல்லா பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவியாபாரிகளாகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம் செய்தார்கள். 22சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னுடன் வியாபாரம் செய்து, மேல்த்தரமான எல்லாவித நறுமணப்பொருட்களையும், எல்லாவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்தார்கள். 23ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள். 24இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னுடன் வியாபாரம்செய்தார்கள். 25உன்னுடைய தொழில் துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்பாடினார்கள்; நீ கடலின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய்#27:25வியாபார பொருட்களால் நிறைந்து கடல் பிரயாணம் செய்கிறாய் . 26துடுப்பு போடுகிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக் கொண்டுபோனார்கள்; நடுக்கடலிலே கிழக்குக்காற்று உன்னை உடைத்துப்போட்டது. 27நீ நாசமடையும் நாளிலே உன்னுடைய செல்வத்தோடும், விற்பனைப் பொருட்களோடும், தொழில் துறையுடனும் உன்னுடைய கப்பலாட்களும், உன்னுடைய மாலுமிகளும், உன்னில் பழுதுபார்க்கிறவர்களும், உன்னுடைய வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா போர்வீரர்களும், உன் நடுவில் இருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுக்கடலிலே விழுவார்கள். 28உன்னுடைய மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும். 29தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்களுடைய கப்பல்களை விட்டு இறங்கி, கரையிலே நின்று, 30உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு, 31உனக்காக மொட்டையடித்து சணலாடையை உடுத்திக்கொண்டு, உனக்காக மனம்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள். 32அவர்கள் உனக்காகத் தங்களுடைய துக்கத்திலே ஓலமிட்டு, உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் இணையான நகரம் உண்டோ? 33உன்னுடைய வியாபாரபொருட்கள் கடலின் வழியாகக் கொண்டுவரப்படும்போது, அநேக மக்களைத் திருப்திபடுத்தினாய்; உன்னுடைய செல்வம் அதிகமானதினாலும், உன்னுடைய வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக மாற்றினாய். 34நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள். 35தீவுகளின் குடிகள் எல்லாம் உனக்காக திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாக இருப்பார்கள். 36எல்லா மக்களிலுமுள்ள வியாபாரிகள் உன்பேரில் பழி கூறுகிறார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எசேக் 27: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.