2 தீமோ 2:14-26

2 தீமோ 2:14-26 IRVTAM

இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் தோல்வியடையச் செய்வதற்கு ஏதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாகவும் சத்திய வசனத்தை நிதானமாகப் பகுத்துப் போதிக்கிறவனாகவும் உன்னை தேவனுக்குமுன்பாக உத்தமனாக நிறுத்தும்படி விழிப்பாக இரு. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தி உள்ளவர்கள் ஆவார்கள்; அவர்களுடைய வார்த்தை அழுகல் நோயைப்போல பரவும்; இமெனேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்துவிட்டதென்று சொல்லி, சிலருடைய நம்பிக்கையை அழித்துப்போடுகிறார்கள். ஆனாலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவன் என்பதும், அதற்கு முத்திரையாக இருக்கிறது. ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களும் உண்டு; அவைகளில் சில மதிப்புமிக்கவைகளும், சில மதிப்பற்றவைகளும் ஆகும். ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான். அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 தீமோ 2:14-26