2 கொரி 1:3-11

2 கொரி 1:3-11 IRVTAM

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், எல்லாவிதமான ஆறுதலின் தேவனுமாக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எப்படிப்பட்ட உபத்திரவங்களிலும் இருப்பவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்கிறவர்களாவதற்கு, எங்களுக்கு வரும் எல்லா உபத்திரவங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது. நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம். எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம். அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம். அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.