1 பேது 1:3-12

1 பேது 1:3-12 IRVTAM

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற தங்கம் நெருப்பினாலே சோதிக்கப்படும்; அதைவிட அதிக விலையுயர்ந்த உங்களுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகக் காணப்படும். நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவரை நேசிக்கிறீர்கள்; இப்பொழுது நீங்கள் அவரைப் பார்க்காமல் இருந்தும் அவர்மேல் விசுவாசம் வைத்து, சொல்லமுடியாததும், மகிமையினால் நிறைந்ததுமாக இருக்கிற சந்தோஷம் உள்ளவர்களாகக் களிகூர்ந்து, உங்களுடைய விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்கிறீர்கள். உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்; தங்களுக்குள் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவிற்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்பு வரும் மகிமைகளையும் முன்னமே அறிவித்தபோது, இந்தக் காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் என்ன என்பதையும் ஆராய்ந்தார்கள். தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள்.