1 கொரி 1:17-31

1 கொரி 1:17-31 IRVTAM

ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக இருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது. ஞானி எங்கே? வேதபண்டிதன் எங்கே? இந்த உலகத்தின் தர்க்கஞானி எங்கே? இந்த உலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார். ஆனாலும் யூதர்களானாலும் கிரேக்கர்களானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாக இருக்கிறார். இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் எனப்படுவது மனிதர்களுடைய ஞானத்திலும் அதிக ஞானமாக இருக்கிறது; தேவனுடைய பலவீனம் எனப்படுவது மனிதர்களுடைய பலத்திலும் அதிக பலமாக இருக்கிறது. எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாக எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவிற்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.