Chapa ya Youversion
Ikoni ya Utafutaji

யோவான் 17

17
17 அதிகாரம்
1இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
2பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.
3ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
4பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
5பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.
6நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
7நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள்.
8நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
9நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
10என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
11நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
12நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.
14நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
15நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
16நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
17உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
18நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.
19அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.
20நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்.
21அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
22நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
23ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
24பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.
25நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
26நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

Kuonyesha

Shirikisha

Nakili

None

Je, ungependa vivutio vyako vihifadhiwe kwenye vifaa vyako vyote? Jisajili au ingia