YouVersion logo
Dugme za pretraživanje

ஆதியாகமம் 14

14
14 அதிகாரம்
1சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;
2அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
3இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
4இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம் பண்ணினார்கள்.
5பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
6சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
7திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும் கூடச் சங்கரித்தார்கள்.
8அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,
9ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.
10அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
11அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கோமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
12ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.
13தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும், ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.
14தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர் மட்டும் அவர்களைத் தொடர்ந்து,
15இராக்காலத்திலே அவனும், அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி,
16சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.
17அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
19அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
20உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
21சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.
22அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,
23வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
24வாலிபர் சாப்பிட்டதுபோக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li da tvoje istaknuto bude sačuvano na svim tvojim uređajima? Kreiraj nalog ili se prijavi