YouVersion logo
Dugme za pretraživanje

மத்தேயு 2

2
அறிஞர்கள் வருகை
1ஏரோது அரசனாய் இருந்த காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்து, 2“யூதருக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே இருக்கின்றார்? நாங்கள் அவரின் நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம். அவரை வழிபட வந்திருக்கிறோம்” எனக் கேட்டார்கள்.
3ஏரோது அரசன் இதைக் கேட்டபோது கலக்கமடைந்தான். எருசலேம் மக்களும் அவனுடன் சேர்ந்து கலக்கமடைந்தனர். 4அப்போது அவன் எல்லா தலைமை மதகுருக்களையும், நீதிச்சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி, “மேசியா எங்கே பிறப்பார்?” எனக் கேட்டான். 5அவர்களோ, “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார்; ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே:
6“ ‘யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே,
யூதாவை ஆட்சி செய்பவர்களுள் நீ அற்பமானவனல்ல;
ஏனெனில், உன்னிடத்திலிருந்து ஆள்பவர் ஒருவர் வருவார்.
அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார்’ ”#2:6 மீகா 5:2
எனப் பதிலளித்தார்கள்.
7அதன்பின் ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை அவர்களிடமிருந்து கேட்டு அறிந்துகொண்டான். 8அவன் அவர்களிடம், “நீங்கள் போய் குழந்தையைக் கவனமாய்த் தேடிப் பாருங்கள். அவரைக் கண்டதும், நானும் போய் அவரைப் பணிந்துகொள்ளும்படி உடனே எனக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.
9அரசன் கூறியதைக் கேட்ட பின், அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள். அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம், அவர்களுக்கு முன்னாகச் சென்றது. அது குழந்தை இருக்கும் இடம் வரை வந்து, அதற்கு மேலாக நின்றது. 10அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, அதிக மனமகிழ்ச்சி கொண்டவர்களாய் சந்தோஷமடைந்தார்கள். 11அவர்கள் வீட்டிற்குள் சென்றபோது, தாய் மரியாளுடன் குழந்தை இருக்கக் கண்டு, தரையில் விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள். பின்பு தங்கள் திரவியப் பெட்டியைத் திறந்து தங்கம், நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றை பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். 12அதன்பின் ஏரோதிடம் திரும்பவும் போகக் கூடாது என அவர்கள் கனவிலே எச்சரிக்கப்பட்டிருந்தபடியால், தங்கள் நாட்டிற்கு வேறு வழியாகத் திரும்பிப் போனார்கள்.
எகிப்திற்குத் தப்பிச் செல்லுதல்
13அவர்கள் திரும்பிச் சென்ற பின்பு, கர்த்தரின் தூதன் ஒருவன் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டு, எகிப்துக்குத் தப்பிப் போ. நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு. ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காக வழி தேடுகிறான்” என்றான்.
14உடனே யோசேப்பு எழுந்திருந்து, குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றான். 15அவன் ஏரோது மரணமடையும் வரைக்கும் அங்கேயே இருந்தான். இவ்வாறு கர்த்தர் தனது இறைவாக்கினன் மூலமாக, “எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன்”#2:15 ஓசி. 11:1 என்று கூறியிருந்தது நிறைவேறியது.
16தான் அறிஞர்களினால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபோது, ஏரோது கடுங்கோபம் கொண்டான். அதனால் அவன் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள இரண்டு வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடைய எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான். 17அப்போது இறைவாக்கினன் எரேமியா மூலமாய் கூறப்பட்டது நிறைவேறியது:
18“ராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது,
அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன,
ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள்.
அவர்களை இழந்ததனால்
ஆறுதல் பெற மறுக்கிறாள்.”#2:18 எரே. 31:15
நாசரேத்துக்குத் திரும்புதல்
19ஏரோது மரணித்த பின், கர்த்தரின் தூதன் எகிப்தில் இருந்த யோசேப்புக்குக் கனவில் தோன்றி, 20“எழுந்திரு, குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டுக்குப் போ; ஏனெனில் குழந்தையின் உயிரை வாங்கத் தேடியவர்கள் இறந்துவிட்டார்கள்” என்றான்.
21எனவே அவன் எழுந்து, குழந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டு, இஸ்ரயேல் நாட்டிற்கு வந்தான். 22ஆனால் ஏரோதின் வாரிசான அவனது மகன் அர்கெலாயு, யூதேயா பிரதேசத்தில் ஆட்சி செய்கின்றான் என யோசேப்பு கேள்விப்பட்டபோது, அவன் யூதேயாவுக்குப் போகப் பயந்தான். அத்துடன் அவன் கனவிலே எச்சரிக்கப்பட்ட படியால், கலிலேயா மாவட்டத்திற்குப் போய், 23அங்கு நாசரேத் என்ற ஊருக்குச் சென்று, அங்கே குடியிருந்தான். எனவே, “அவர் நசரேயன்#2:23 நசரேயன் என்பது நாசரேத் ஊரான் என அழைக்கப்படுவார்” என இறைவாக்கினரால் இயேசுவைக் குறித்து சொல்லப்பட்டது இவ்வாறு நிறைவேறியது.

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li da tvoje istaknuto bude sačuvano na svim tvojim uređajima? Kreiraj nalog ili se prijavi

Video za மத்தேயு 2