YouVersion Logo
Search Icon

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!Sample

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

DAY 12 OF 20

12. உன்னைக் காக்கும் நல்யோசனை!

1 சாமுவேல் 25: 33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக.

அபிகாயில் சொன்ன யோசனையை தாவீது ஏற்றுக்கொண்டான் என்று பார்த்தோம். இன்றைய வசனத்தைப் படிக்கும்போது தாவீதின் குமாரனாகிய சாலொமோன் நீதிமொழிகளில் கூறியது நினைவிற்கு வந்தது

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்; புத்தி உன்னைப் பாதுகாக்கும் (நீதி:2:11)

எத்தனையோமுறை நாம் பேசிவிட்டு பின்னர் யோசிக்கிறோம். ஆனால் இன்று அபிகாயிலின் வாழ்க்கையின் மூலம், யோசித்தபின்னர் பேசுவதைப் பற்றி வேதத்திலிருந்து அறிகிறோம். நாம் ஒரு காரியத்தைக் குறைவாகப் புரிந்து கொண்டு பேசும்போது என்ன நடக்கும்? நாம் யோசிக்காமல் பேசிவிட்டதை உலகுக்கே காட்டிவிடும் அல்லவா?

ஒருவேளை சாலொமோன் இதைத் தன் தகப்பனாகிய தாவீதின் மூலம்தான் அறிந்திருக்கலாம். மற்றும் அவன் நீதிமொழிகள் 3:21 ல், என் மகனே, இவைகள் உன் கண்களைவிட்டுப் பிரியாதிருப்பதாக: மெய்ஞானத்தையும், நல்லாலோசனையையும் காத்துக்கொள், என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். தாவீது இந்த அரிய பாடத்தை தான் சந்தித்த நல்யோசனை கொண்ட அபிகாயிலின் மூலம் கற்றிருந்திருக்கலாம் அல்லவா!

அபிகாயிலைப்பற்றி நாம் முதன்முதலில் வேதத்தின் வாசிக்கும்போதே அவள் புத்திசாலியும், ரூபவதியுமாயிருந்தாள் என்று வேதம் கூறுகிறது ( 25:3). அவளுடைய வெளிப்புறமான அழகுக்கு முன்னரே புத்திசாலித்தனம் இடம் பெறுகிறது. அவளுடைய வெளிப்புற அழகு அவளுடைய உட்புற புத்திசாலித்தனத்தை கருமையாக்கவில்லை!

நான் அநேக அழகானவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வாயைத் திறந்தால் புத்தியீன வார்த்தைகள் அவர்களிடமிருந்து அருவி போல வருவதைப் பார்க்கலாம்!

எதையுமே அரைகுறையாகப் புரிந்து கொண்டு, அதையும் இதையும் முடிச்சி போட்டு பேசுபவர்கள்! நம்மில் எத்தனைபேர் இவ்வித வெளிப்புற அழகைக்கண்டு மயங்கி , கண்மூடித்தனமாக நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டு இன்று அழுது புலம்பி கொண்டிருக்கிறோம்?

நல் யோசனை உன்னைக் காப்பாற்றும் ஏனெனில் அது நமக்கு தேவன் அளிக்கும் பரம ஈவு!

நாம் எதையும் பேசும்போது அடுக்கு மொழி அவசியமில்லை! நல்யோசனை அவசியம்!

நல்யோசனை என்ற இந்த வார்த்தைக்கு உன்னுடைய வாழ்க்கையில் அர்த்தம் என்ன?

என்றாவது ஒருநாள், ஐயோ நான் பேசும்முன் ஆலோசனை பண்ணாமல் பேசிவிட்டேனே என்று எண்ணியுள்ளாயா? உடனுக்குடன் பதில் கொடுத்து பேசுவது, அதிகமான வார்த்தைகளை அள்ளி வீசுவது, சுய கர்வத்தோடு பேசுவது இவை என்றுமே அழிவுக்கு வழியென்றுதான் எனக்குத் தோன்றும்!

அபிகாயில் யோசித்து பேசின வார்த்தைகள் அவளையும் அவளுடைய குடும்பத்தையும் பேரழிவினின்று காத்தன!

உன்னுடைய வார்த்தைகள் எப்படிப்பட்டன என்று சிந்தித்துப் பார்!

Day 11Day 13

About this Plan

கர்மேல் பர்வதத்தின் முட்களுக்குள்ளும் மலர்ந்த உறவு!

தாவீதுக்கும் அபிகாயிலுக்கும் நடுவே மலர்ந்த உறவு முட்களுக்குள் மலர்ந்த ஒரு மலர் போன்றது. அவர்கள் சந்தித்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றது நமக்கு அநேக ஆவிக்குரிய சத்தியங்களை அளிப்பதற்காகவே. இந்த 20 நாட்கள் திட்டத்தில், கர்மேல் பர்வதத்திற்கு நாம் பயணித்து, தாழ்மையாலும், அன்பாலும், சாந்தத்தாலும் தன்னுடைய குடும்பத்தை பேரழிவிலிருந்து காத்து, இஸ்ரவேலை ஆளப்பிறந்த தாவீதின் வாழ்வில் மலர்ந்த ஒரு அற்புத உறவைப்பற்றி நாம் படிக்கலாம்.

More