ஆதியாகமம் 28
28
1அப்பொழுது ஈசாக்கு யாக்கோபைக் கூப்பிட்டு, அவனை ஆசீர்வதித்து, அவனுக்குக் கட்டளையிட்டதாவது: “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே. 2உடனே பதான் அராமிலுள்ள உன் தாயின் தந்தை பெத்துயேலின் வீட்டுக்குப்போ. அங்கே உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்களில் ஒருத்தியை உன் மனைவியாக்கிக்கொள். 3எல்லாம் வல்ல இறைவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னை இனவிருத்தியுள்ளவனாக்கி, நீ ஒரு மக்கள் கூட்டமாகும் வரைக்கும் அவர் உன்னைப் பெருகப்பண்ணுவாராக. 4ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை இறைவன் உனக்கும், உன் சந்ததிக்கும் கொடுப்பாராக. எனவே இறைவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும், இப்பொழுது நீ அந்நியனாய் வாழ்கின்றதுமான இந்த நாட்டை, நீ உரிமையாக்கிக்கொள்வாய்” என்றான். 5அதன்பின் ஈசாக்கு, யாக்கோபை வழியனுப்பினான்; அவன் பதான் அராமிலிருந்த அரமேயனான பெத்துயேலின் மகன் லாபானிடம் போனான். லாபான் யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகிய ரெபெக்காளின் சகோதரன்.
6ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, பதான் அராமிலிருந்து ஒரு பெண்ணை எடுக்கும்படி அவனை அங்கு அனுப்பியதை ஏசா அறிந்தான். அவனை ஆசீர்வதிக்கும்பொழுது, “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே” என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும் கேள்விப்பட்டான். 7அத்துடன், யாக்கோபு தன் தகப்பனுக்கும் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் போய்விட்டதையும் ஏசா அறிந்தான். 8அப்பொழுது தன் தகப்பன் ஈசாக்கு கானானியப் பெண்களில் எவ்வளவு வெறுப்பாய் இருக்கிறார் என்பதை ஏசா உணர்ந்தான். 9எனவே ஏசா ஆபிரகாமின் மகனான இஸ்மயேலிடம் போய், அவன் மகள் மகலாத்தைத் திருமணம் செய்தான். நெபாயோத்தின் சகோதரியான அவளை ஏற்கெனவே தனக்கிருந்த மனைவிகளுடன் சேர்த்துக்கொண்டான்.
பெத்தேலில் யாக்கோபின் கனவு
10யாக்கோபு பெயெர்செபாவைவிட்டு ஆரானுக்குப் புறப்பட்டான். 11அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, சூரியன் மறைந்ததால் அந்த இடத்திலே இரவு தங்கினான். அவன் அங்கிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்து உறங்கினான். 12அப்பொழுது அவன் ஒரு ஏணி பூமியிலிருந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டான்; அதிலே இறைவனின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். 13யெகோவா அதற்கு மேலாக நின்று அவனிடம், “உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனுமாகிய யெகோவா நானே. உனக்கும் உன் சந்ததிக்கும், நீ படுத்திருக்கிற இந்த நாட்டைத் தருவேன். 14உன் சந்ததிகள் பூமியின் புழுதியைப்போல் பெருகுவார்கள். நீ மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவுவாய். உன்னாலும், உன் சந்ததியினாலும், பூமியிலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15நான் உன்னுடனே இருக்கிறேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாத்து, உன்னைத் திரும்பவும் இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் உனக்கு வாக்குப்பண்ணியதை நிறைவேற்றும்வரை, உன்னைவிட்டு விலகவேமாட்டேன்” என்றார்.
16யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, “யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே” என்று நினைத்தான். 17அவன் பயந்து, “இந்த இடம் எவ்வளவு பிரமிப்புக்குரியது! இது இறைவனுடைய வீடேயன்றி வேறல்ல; இது பரலோகத்தின் வாசல்” என்றான்.
18மறுநாள் அதிகாலையில், யாக்கோபு தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். 19அந்த இடத்திற்கு அவன் பெத்தேல்#28:19 பெத்தேல் என்றால் இறைவனின் வீடு என்று பொருள். என்று பெயரிட்டான், முன்பு அந்தப் பட்டணம் லூஸ் என்று அழைக்கப்பட்டிருந்தது.
20பின்பு யாக்கோபு ஒரு பொருத்தனை செய்து, சொன்னதாவது: “இறைவன் என்னோடிருந்து, நான் போகும் பயணத்தில் என்னைக் காப்பாற்றி, சாப்பிட உணவும், உடுக்க உடையும் தந்து, 21பாதுகாப்புடன் என் தகப்பன் வீட்டுக்குத் திரும்பி வரப்பண்ணுவாரானால், யெகோவாவே என் இறைவனாயிருப்பார். 22நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் இறைவனின் வீடாக இருக்கும். நீர் எனக்குக் கொடுக்கும் எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றை உமக்குக் கொடுப்பேன்” என்றான்.
Currently Selected:
ஆதியாகமம் 28: TCV
Highlight
Share
ਕਾਪੀ।

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.