ஆதியாகமம் 22

22
ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல்
1இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார்.
ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
2தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே குமாரனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் குமாரனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.
3காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள். 4அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது. 5ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் குமாரனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.
6பலிக்கான விறகுகளை எடுத்து குமாரனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது குமாரனும் சேர்ந்து போனார்கள்.
7ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான்.
ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான்.
ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.
8அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான்.
ஆபிரகாமும் அவனது குமாரனும் 9தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து குமாரனை வெட்டுவதற்குத் தயாரானான்.
11அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே, ஆபிரகாமே” என்று அழைத்தார்.
ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.
12தேவதூதன்: “உனது குமாரனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு குமாரனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.
13ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் குமாரன் காப்பாற்றப்பட்டான். 14அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யேகோவா யீரே”#22:14 யேகோவா யீரே “கர்த்தர் பார்க்கிறார்” அல்லது “கர்த்தர் கொடுக்கிறார்” என்று அர்த்தம். என்று பெயரிட்டான். “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.
15கர்த்தருடைய தூதன் இரண்டாவது முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து, 16“எனக்காக உன் குமாரனைக் கொல்லத் தயாராக இருந்தாய், இவன் உனது ஒரே குமாரன். இதை எனக்காகச் செய்தாய். 17கர்த்தராகிய நான் உண்மையாகவே உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று நான் உன் சந்ததியைப் பெருகச் செய்வேன். கடற்கரையிலுள்ள மணலைப் போன்று எண்ணற்ற வாரிசுகளையும் தருவேன். உனது ஜனங்கள் தங்கள் பகைவர்களை வெல்லுவார்கள். 18பூமியிலுள்ள ஒவ்வொரு நாடும் உனது சந்ததி மூலம் ஆசீர்வாதத்தைப்பெறும். நீ எனக்குக் கீழ்ப்படிந்தாய். அதனால் இதை நான் உனக்குச் செய்வேன்” என்றார்.
19பிறகு, ஆபிரகாம் தன் வேலைக்காரர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றான், அவர்கள் அனைவரும் பெயெர்செபாவுக்குத் திரும்பினார்கள். ஆபிரகாம் அங்கேயே தங்கியிருந்தான்.
20இவை எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆபிரகாமுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், “உனது சகோதரன் நாகோருக்கும் அவனது மனைவி மில்காளுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளனர். 21முதல் குமாரனின் பெயர் ஊத்ஸ். இரண்டாவது குமாரனின் பெயர் பூஸ். மூன்றாவது குமாரனின் பெயர் கேமுவேல். இவன் ஆராமின் தந்தை. 22மேலும் கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்களும் உள்ளனர். பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான்” என்று கூறப்பட்டிருந்தது. 23அந்த எட்டு பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். 24ரேயுமாள் என்ற அவனது வேலைக்காரி தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på

Video om ஆதியாகமம் 22