ஆதியாகமம் 15

15
ஆபிராமோடு தேவனின் உடன்படிக்கை
1இவையெல்லாம் நடந்த பிறகு கர்த்தரின் வார்த்தையானது ஆபிராமுக்குத் தரிசனத்தில் வந்தது. தேவன், “ஆபிராமே, நீ பயப்படவேண்டாம். நான் உன்னைப் பாதுகாப்பேன். உனக்குப் பெரிய பரிசு தருவேன்” என்றார்.
2ஆனால் ஆபிராமோ, “தேவனாகிய கர்த்தாவே! நீர் கொடுக்கிற எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தராது, ஏனென்றால் எனக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே நான் மரித்த பிறகு எனக்குரிய பொருட்கள் எல்லாம் எனது அடிமையான தமஸ்குவைச் சேர்ந்த எலியேசருக்கு உரியதாகும்” என்றான். 3மேலும் ஆபிராம், “நீர் எனக்கு குமாரனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான்.
4கர்த்தர் ஆபிராமிடம், “அந்த அடிமை உனக்குரியவற்றைப் பெறமாட்டான். உனக்கொரு குமாரன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்றார்.
5பிறகு தேவன் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார், அவற்றை உன்னால் எண்ணமுடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும்” என்றார்.
6ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார். 7தேவன் ஆபிராமிடம், “நானே கர்த்தர். உன்னை பாபிலோனியாவிலுள்ள ஊர் என்னும் பட்டணத்திலிருந்து அழைத்து வந்தேன். நானே இதைச்செய்தேன். இந்தத் தேசத்தை உனக்குக் கொடுக்கிறேன். இது உனக்கே உரியதாகும்” என்றார்.
8ஆனால் ஆபிராமோ, “கர்த்தராகிய என் ஆண்டவரே! இந்தத் தேசம் எனக்கு உரியதாகும் என்று எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?” என்று கேட்டான்.
9தேவன் ஆபிராமிடம், “நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம், மூன்று ஆண்டுகள் ஆன ஒரு பசுவை கொண்டு வா. அதோடு மூன்று ஆண்டுகள் ஆன ஆட்டையும், ஆட்டுக்கடாவையும், கொண்டு வா, அதோடு ஒரு காட்டுப் புறாவையும், புறாக் குஞ்சையும் என்னிடம் கொண்டு வா” என்றார்.
10ஆபிராம் இவை எல்லாவற்றையும் தேவனிடம் கொண்டு வந்தான். ஒவ்வொன்றையும் கொன்று இரண்டு துண்டுகளாக வெட்டி, பிறகு ஒரு பாதியை இன்னொரு பாதியோடு சேர்த்தான். பறவைகளை அவன் அவ்வாறு வெட்டவில்லை. 11பின்னர், பெரிய பறவைகள் விலங்குகளின் உடலை உண்ண கீழே பறந்து வந்தன. ஆபிராம் அவற்றைத் துரத்தினான்.
12சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கியபோது ஆபிராமுக்குத் தூக்கம் வந்தது. அத்துடன் அச்சுறுத்தும் இருள் அவனைச் சூழ்ந்துகொண்டது. 13பிறகு கர்த்தர் ஆபிராமிடம், “நீ இவ்விஷயங்களைப்பற்றி அறிய வேண்டும். உனது சந்ததி தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அங்குள்ளவர்கள் அவர்களை 400 ஆண்டு காலத்துக்கு அடிமைகளாக வைத்திருந்து, மோசமாக நடத்துவார்கள். 14ஆனால் நான் அந்த நாட்டைத் தண்டிப்பேன். உனது ஜனங்கள் அந்நாட்டை விட்டு பல்வேறு பொருட்களுடன் வெளியேறுவார்கள்.
15“நீ நல்ல முதிர் வயதாகும்வரை வாழ்ந்து, சமாதானமாக மரணமடைவாய். 16நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும், ஏனென்றால் இன்னும் எமோரியர்கள் தண்டிக்கப்படுகிற அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப்போகவில்லை” என்றார்.
17சூரியன் அஸ்தமித்தபின் மேலும் இருளாயிற்று. மரித்துப்போன மிருகங்கள் தரையின் மேலேயே கிடந்தன. இரண்டு துண்டுகளாகக் கிடந்த அவற்றின் உடலிலிருந்து சூளையின் புகையும் நெருப்பும் வெளிவந்தன.
18ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på

Video om ஆதியாகமம் 15