ஆதியாகமம் 14

14
ஆபிராம் லோத்துவை காப்பாற்றுதல்
1அந்நாட்களில் சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு, ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால் 2ஆகிய இவர்கள் சோதோமின் அரசன் பேரா, கொமோராவின் அரசன் பிர்சா, அத்மாவின் அரசன் சினாபு, செபோயீமின் அரசன் செமேபர், பேலா என்னும் சோவாரை ஆண்ட அரசன் ஆகியோருடன் யுத்தம்செய்யப் புறப்பட்டார்கள். 3இந்த பிந்தைய அரசர்கள், தங்கள் படைகளை உப்புக்கடல் என்னும் சித்தீம் பள்ளத்தாக்கில் ஒன்றுகூடி அணிவகுத்தார்கள். 4பன்னிரண்டு வருடங்களாக கெதர்லாகோமேரின் ஆதிக்கத்திற்குள் இருந்த இவர்கள், பதிமூன்றாம் வருடத்தில் அவனை எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள்.
5பதினாலாவது வருடத்தில், கெதர்லாகோமேரும் அவனுடன் கூட்டுச்சேர்ந்த அரசர்களும் ஒன்றுசேர்ந்து, அஸ்தரோத் கர்னாயீமில் இருந்த ரெப்பாயீமியரையும், காமிலிருந்த சூசிமியரையும், சாவே கீரியாத்தாயீமிலே இருந்த ஏமியரையும், 6பாலைவனத்துக்கு அருகே எல்பாரான் வரையுள்ள, சேயீர் மலைநாட்டில் வாழ்ந்த ஓரியரையும் தோற்கடித்தார்கள். 7பின்பு அவர்கள் மற்றப் பக்கமாகத் திரும்பி, காதேஸ் எனப்படும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியரின் முழுப் பிரதேசத்தையும் கைப்பற்றிக்கொண்டார்கள். அதோடு அத்சாத்சோன் தாமாரில் இருந்த எமோரியரையும் வெற்றிகொண்டார்கள்.
8அப்பொழுது அவர்களை எதிர்க்க சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் (அது சோவார்), பேலா ஆகிய நாடுகளின் அரசர்கள் அணிவகுத்துச்சென்று, சித்தீம் பள்ளத்தாக்கில் 9ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், கோயீமின் அரசன் திதியால், சிநெயாரின் அரசன் அம்ராப்பேல், ஏலாசாரின் அரசன் அரியோகு ஆகிய நான்கு அரசர்களும், மற்ற ஐந்து அரசர்களையும் எதிர்த்துப் போரிட்டார்கள். 10சித்தீம் பள்ளத்தாக்கில் பல நிலக்கீல் குழிகள் இருந்தன; அந்த போரில் சோதோம், கொமோரா நாட்டு அரசர்கள் தோல்வியடைந்து தப்பி ஓடியபோது, அவர்கள் அக்குழிகளில் விழுந்தார்கள்; மற்றவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். 11வெற்றியடைந்த நான்கு அரசர்களும், சோதோமிலும் கொமோராவிலும் இருந்த எல்லா பொருட்களையும், உணவுப் பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டு வீடு திரும்பினார்கள். 12அத்துடன், சோதோமில் குடியிருந்த ஆபிராமுடைய சகோதரனின் மகனான லோத்தையும், அவனது உடைமைகளையும் கொண்டுபோய்விட்டார்கள்.
13தப்பியோடிய ஒருவன், எபிரெயனாகிய ஆபிராமிடம் வந்து அச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம், எமோரியனாகிய மம்ரேக்குச் சொந்தமான கருவாலி மரங்களின் அருகே குடியிருந்தான்; மம்ரே என்பவன் ஆபிராமுடன் நட்பு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோல், ஆநேர் என்போரின் சகோதரன். 14தன் உறவினனான லோத்து கைதியாகக் கொண்டு போகப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன் வீட்டில் பிறந்தவர்களான முந்நூற்றுப் பதினெட்டு பயிற்சி பெற்ற மனிதருடன் அவர்களை தாண்வரை துரத்திச்சென்றான். 15அன்றிரவு ஆபிராம், தன் ஆட்களை அணிகளாகப் பிரித்து, எதிரிகளைத் தாக்கினான்; அவன் அவர்களை தமஸ்குவுக்கு வடக்கே ஓபாவரை துரத்தி முறியடித்தான். 16அவன் லோத்தையும், அவனுடைய எல்லா உடைமைகளையும், பெண்களையும், மற்றவர்களையும் மீட்டுக்கொண்டு திரும்பினான்.
17ஆபிராம், கெதர்லாகோமேரையும், அவனுடைய நண்பர்களாகிய அரசர்களையும் தோற்கடித்துத் திரும்பி வந்தபின், சோதோமின் அரசன், ஆபிராமைச் சந்திப்பதற்காக அரச பள்ளத்தாக்கு எனப்படும் சாவே பள்ளத்தாக்கிற்கு வந்தான்.
18அப்பொழுது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டுவந்தான். மெல்கிசேதேக்கு என்பவன் மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனாய் இருந்தான். 19அவன் ஆபிராமை ஆசீர்வதித்து சொன்னது:
“வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய
மகா உன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும்.
20உன் பகைவரை உன் கையில் ஒப்படைத்த,
மகா உன்னதமான இறைவன், துதிக்கப்படுவாராக.”
ஆபிராம் தன்னிடமிருந்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை அவனுக்குக் கொடுத்தான்.
21அதன்பின் சோதோமின் அரசன் ஆபிராமிடம், “ஆட்களை என்னிடம் கொடும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான்.
22ஆனால் ஆபிராம் சோதோமின் அரசனிடம், “நான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான யெகோவாவுக்கு என் கைகளை உயர்த்தி சத்தியம் செய்கிறதாவது: 23‘ஆபிராமை நானே செல்வந்தன் ஆக்கினேன்’ என்று நீ சொல்லாதபடி, உன்னிடமிருந்து ஒரு நூலையோ, செருப்பின் வாரையோ அல்லது உனக்குச் சொந்தமான பொருள் எதையுமோ நான் எடுத்துக்கொள்ளமாட்டேன். 24என் ஆட்கள் சாப்பிட்டதையும் என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகிய மனிதரின் பங்கையும் தவிர, வேறொன்றையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.

Highlight

Kongsi

Salin

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk