ஆதியாகமம் 8

8
வெள்ளப் பெருக்கின் முடிவு
1ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது.
2வானிலிருந்து பெய்த மழை நின்றது. 3-4பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். 5வெள்ளமானது மேலும், மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
6நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, 7ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. 8நோவா ஒரு புறாவையும் வெளியே அனுப்பினான். அது தான் தங்கிட ஒரு வறண்ட இடத்தைக் கண்டுக்கொள்ளும் என எண்ணினான். இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தான்.
9ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது. நோவா அதனைத் தன் கையை நீட்டிப் பிடித்து கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
10ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான். 11அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான். 12மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை.
13அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். 14இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது.
15பிறகு தேவன் நோவாவிடம், 16“நீயும் உன் மனைவியும் உன் குமாரர்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். 17உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார்.
18எனவே நோவா தன் மனைவி, குமாரர்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். 19கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன.
20பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான்.
21கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன். 22பூமி தொடர்ந்து இருக்கும் காலம்வரை நடுவதற்கென்று ஒரு காலமும், அறுவடைக்கென்று ஒரு காலமும் இருக்கும். பூமியில் குளிரும் வெப்பமும், கோடையும் வசந்தமும், இரவும் பகலும் இருக்கும்” என்றார்.

Одоогоор Сонгогдсон:

ஆதியாகமம் 8: TAERV

Тодруулга

Хуваалцах

Хувилах

None

Тодруулсан зүйлсээ бүх төхөөрөмждөө хадгалмаар байна уу? Бүртгүүлэх эсвэл нэвтэрнэ үү

ஆதியாகமம் 8-д зориулсан видео